இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களாக மாறவுள்ள, இளம் வீரர்களுக்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜெஹான் முபாரக் தெரிவித்துள்ளார்.
இலங்கை 19 வயதின் கீழ் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 இளையோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
>> மும்பை அணியில் மீண்டும் இணைந்த ட்ரெண்ட் போல்ட்
குறித்த இந்த தொடருக்கான இலங்கை குழாம் புறப்பட்டுச்சென்றுள்ளதுடன், அணியானது இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜெஹான் முபாரக் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருந்தார்.
தொடர் குறித்து குறிப்பிட்ட இவர், “தொடர் குறித்து அதிகமான எதிர்பார்ப்புகள் உள்ளன. குழாத்தில் உள்ள அனைவரும் இங்கிலாந்தில் விளையாடியதில்லை. எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு விளையாடுவார்களாக இருந்தால், இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு கைகொடுக்கும்.
இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணி, உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த அணி. எனவே, அந்த அணியை வீழ்த்துவதன் மூலம், நாமும் பலமான அணியென நிரூபிக்க முடியும்” என்றார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியிலும் பயிற்சிகளை நல்ல முறையில் மேற்கொள்ள முடிந்ததாக இவர் சுட்டிக்காட்டினார்.
“நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையிலும், சிறந்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தம்புள்ள, கண்டி மற்றும் கொழும்பில் தனித்தனி முகாம்களாக பயிற்சிகளை மேற்கொண்டோம். போக்குவரத்து சிரமங்கள் காரணமாகவே இவ்வாறான தனித்தனி பயிற்சி முகாம்களை நடத்தினோம். குறிப்பாக இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களை அமைத்து பயிற்சிகளை மேற்கொள்ள நினைத்திருந்தோம். குறிப்பிட்ட இந்த விடயம் எமக்கு சாதகமாகியிருந்தது” என்றார்.
இதேவேளை அணிக்குழாம் மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான தொடரை எவ்வாறு முகங்கொள்வது என்பது தொடர்பிலும் முபாரக் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.
>> “இங்கிலாந்தை வீழ்த்தி பலமான அணியென நிரூபிக்கவேண்டும்” – முபாரக்!
“எம்மிடம் நல்ல குழாம் ஒன்று உள்ளது. பலமான வீரர்கள் உள்ளனர். சிறந்த அணித்தலைவராக ரவீன் டி சில்வா உள்ளார். அதேநேரம், கழகமட்ட போட்டிகளில் விளையாடிய வீரர்களும் உள்ளனர். இந்த அனுபவம் இங்கிலாந்து தொடரில் எமக்கு உதவும்.
நாம் இங்கிலாந்தில் தொடர் வெற்றியை பெறுவதற்கு எண்ணியுள்ளோம். அதேநேரம், அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவும் நினைத்துள்ளோம். எம்மிடம் 18 வீரர்கள் இருக்கிறார்கள். ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளோம். எனவே, அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து சிறந்த திறமையை வெளிப்படுத்த எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் எதிர்வரும் 21ம் திகதி இளையோர் டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<