சுற்றுலா இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி (U19) மற்றும் இங்கிலாந்தின் யங் லயன்ஸ் அழைப்பு XI அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றது.
எனினும் இந்த பயிற்சிப் போட்டியில் இலங்கை இளம் கிரிக்கெட் அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.
வன்னிநாயக்கவின் அரைச் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி
கடந்த புதன்கிழமை லோக்போரோக் நகரில் ஆரம்பித்திருந்த இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் 56 ஓவர்களே வீசப்பட்டிருந்தோடு, இந்த ஓவர்கள் அனைத்தினையும் தமது முதல் இன்னிங்ஸில் எதிர்கொண்ட இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி 182 ஓட்டங்களுக்கு 4 விக்ககெட்டுக்களை இழந்திருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த அசித வன்னிநாயக்க 81 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 2 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருக்க, மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (19) தொடர்ந்தது.
அதன்படி மூன்றாம் நாளில் 24 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்ட இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 248 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடை நிறுத்தியது.
இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி துடுப்பாட்டத்தில் சதம் விளாசிய அசித வன்னிநாயக்க 13 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதேநேரம் அணித்தலைவர் ரவீன் டி சில்வா 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து யங் லயன்ஸ் அழைப்பு XI அணியின் பந்துவீச்சு சார்பில் RL. எவிட்ஸ் 3 விக்கெட்டுக்களையும், E. ஜேக் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் தமது முதல் இனனிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து யங் லயன்ஸ் அழைப்பு XI அணி தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதுடன் 42.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 104 ஓட்டங்கள் மாத்திரமே முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றுக் கொண்டது.
டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள்!
இங்கிலாந்து யங் லயன்ஸ் அழைப்பு XI அணியின் துடுப்பாட்டம் சார்பில் MD. வேக்ஸ்டாப் அதிபட்சமாக அரைச்சதம் ஒன்றுடன் 53 ஓட்டங்களை எடுக்க, இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வனுஜ சஹான் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, துலாஜ் சமுதித மற்றும் துவின்து ரணதுங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் 144 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடையும் போது 26 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இந்த முறை அரைச்சதம் விளாசியிருந்த அபிஷேக் லியனராச்சி 8 பௌண்டரிள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்திருக்க, இங்கிலாந்து யங் லயன்ஸ் அழைப்பு XI அணியின் பந்துவீச்சில் E. ஜேக் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை பயிற்சிப் போட்டியை அடுத்து, இலங்கை – இங்கிலாந்து 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை (U19) அணி (முதல் இன்னிங்ஸ்) – 247/7d (80) அசித வன்னிநாயக்க 100, ரவீன் டி சில்வா 33*, RL. எவிட்ஸ் 53/3, E. ஜேக் 43/2
இங்கிலாந்து யங் லயன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 104 (42.1) MD. வேக்ஸ்டாப் 53, வனுஜ சஹான் 13/4, துலாஜ் சமுதித 27/2, துவின்து ரணதுங்க 34/2
இலங்கை (U19) அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 132/2 (26) அபிஷேக் லியனராச்சி 51, E. ஜேக் 32/1
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<