பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை இளையோர் அணி அறிவிப்பு

245

பாகிஸ்தான் இளையோர் அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக் குழாம் இன்று (23) இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்குமான அணித்தலைவராக நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி இரண்டு போட்டிகளுக்குமான அணித்தலைவராக கமில் மிஷார பெயரிடப்பட்டுள்ளார்.

கமில் மிஷாரவின் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி

இலங்கை இளையோர் மற்றும் அவுஸ்திரேலிய இளையோர்….

பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் 50 ஓவர்கள் கொண்ட ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. குறித்த ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) தொடக்கம் அடுத்த மாதம் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. குறித்த ஐந்து ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த இளையோர் தொடரானது நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் காரணமாக குறித்த தொடர் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 14ஆம் திகதி வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், நான்கு நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர் இல்லை எனவும், குறித்த தொடருக்கு பதிலாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

குறித்த ஐந்து ஒருநாள் போட்டிகளுக்குமான இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் குழாம் இன்று (23) விளையாட்டுத்துறை  அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அங்கீகாரத்துடன் இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான அணியின் தலைமைத்துவம் நிபுன் தனன்ஜயவிடம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான தலைமைத்துவம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கமில் மிஷாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் (2020) ஐனவரியில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இளையோர் உலகக்கிண்ண தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஸான் திலக்கரட்னவின் பிரதான பயிற்றுவிப்பின் கீழ் இளையோர் அணி கடந்த ஒன்பது மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை, இந்த தொடருக்கான இலங்கை இளையோர் அணியின் முகாமையாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப் முதல் முறையாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் அனைத்தும் ThePapare.com வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதுடன், டயலொக் தொலைக்காட்சியின் 77ஆம் இலக்க அலைவரிசையிலும், ஸ்மாட் கையடக்க தொலைபேசியின் MYTV app வாயிலாகவும் போட்டி நாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான குழாம்

நிபுன் தனன்ஜய – அணித்தலைவர் (புனித ஜோசப் கல்லூரி – வென்னப்புவ), கமில் மிஷார – உப தலைவர் (ரோயல் கல்லூரி – கொழும்பு), நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி – காலி), மொஹமட் ஸமாஷ் (ஸாஹிரா கல்லூரி – கொழும்பு), சொனால் தினுஷ (மஹானாம கல்லூரி – கொழும்பு), அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியர் கல்லூரி – வத்தளை), ரவிந்து டி சில்வா (புனித தோமஸ் கல்லூரி – கல்கிஸ்ஸ), பவண் ரத்நாயக்க (மஹானாம கல்லூரி – கொழும்பு), சந்துன் மெண்டிஸ் (ரிச்மெண்ட் கல்லூரி – காலி), ரவீண் டி சில்வா (நாலந்தா கல்லூரி – கொழும்பு), அஷைன் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு), ரொஷான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி – களுத்துறை), திலும் சுதீர (ரிச்மெண்ட் கல்லூரி – காலி), சமிந்து விஜேசிங்க (நாலந்தா கல்லூரி – கொழும்பு), நவீண் பெர்ணான்டோ (மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு), டில்சான் மதுஷங்க (விஜயபா மத்திய கல்லூரி – ஹூன்கம)

இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான குழாம்.

கமில் மிஷார – அணித்தலைவர் (ரோயல் கல்லூரி – கொழும்பு), நிபுன் தனன்ஜய – (புனித ஜோசப் கல்லூரி – வென்னப்புவ), தவீஷ அபிஷேக் (ரிச்மெண்ட் கல்லூரி – காலி), சமிந்து விக்ரமசிங்க (புனித அந்தோனியர் கல்லூரி – கடுகஸ்தோட்டை), துனித் வெல்லாலகே (புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு), அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியர்; கல்லூரி – வத்தளை), ரவிந்து டி சில்வா (புனித தோமஸ் கல்லூரி – கல்கிஸ்ஸ), பவண் ரத்நாயக்க (மஹானாம கல்லூரி – கொழும்பு), கவிந்து நதீஷான் (தர்மஷோக கல்லூரி – அம்பலாங்கொடை), சந்துன் மெண்டிஸ் (ரிச்மெண்ட் கல்லூரி – காலி), ரவீண் டி சில்வா (நாலந்தா கல்லூரி – கொழும்பு), அஷைன் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு), ரொஷான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி – களுத்துறை), சமிந்து விஜேசிங்க (நாலந்தா கல்லூரி – கொழும்பு), நவீண் பெர்ணான்டோ (மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு), டில்ஷான் மதுஷங்க (விஜயபா மத்திய கல்லூரி – ஹூன்கம)

போட்டி அட்டவணை (அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது)

26 மே – முதலாவது ஒருநாள் போட்டி

28 மே – இரண்டாவது ஒருநாள் போட்டி

31 மே – மூன்றாவது ஒருநாள் போட்டி

2 ஜூன் – நான்காவது ஒருநாள் போட்டி

5 ஜூன் – ஐந்தாவது ஒருநாள் போட்டி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<