மெண்டிஸ் தலைமையில் இளையோர் உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி

1632

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியுஸிலாந்தில் இடம்பெறவுள்ள ICCயின் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ள இலங்கை இளையோர் அணியினை காலி ரிஷ்மண்ட் கல்லூரியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தலைமை தாங்கி வழிநடாத்தவுள்ளார்.

13ஆவது முறையாகவும் இடம்பெறும் இந்த இளையோர் உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் 16 அணிகள் பங்குகொள்ளவுள்ளன.

இளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்

இளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு…

உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை இளையோர் அணியை தலைமை தாங்கும் ரிஷ்மண்ட் கல்லூரியின் இரண்டாவது வீரராக கமிந்து மெண்டிஸ் உள்ளார். இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் அக்கல்லூரி வீரர் ஷரித் அசலங்க தாய்நாட்டை தலைமையேற்று வழிநடாத்தியிருந்தார்.  

இரு கைகளாலும் பந்து வீசும் விஷேட திறமை கொண்ட மெண்டிஸ், கடந்த முறை இடம்பெற்ற உலகக் கிண்ணத்திற்கான இலங்கை இளையோர் அணியில் அங்கம் வகித்த அனுபவத்துடன் இம்முறை அணிக்கு தலைமை தாங்குகின்றார். மருதானை புனித ஜோசப் கல்லூரியின் சகலதுறை வீரர் ஜெஹான் டேனியல் அணியின் துணைத் தலைவராக செயற்படவுள்ளார்.  

இவ்விருவருமே கடந்த முறை இதே தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களான உள்ளனர்.

அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கைக் குழாமில் அங்கம் வகித்த 12 வீரர்கள் அடுத்த உலகக் கிண்ண குழாமிற்கும் பெயரிடப்பட்டுள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி குழுமட்டப் போட்டிகளுடனேயே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கைக் குழாமில் உள்ள வீரர்கள், அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரோய் டயசின் கண்கானிப்பின் கீழ் அடுத்த வாரம் முழுவதும் பல்லேகலையில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை இளையோர் அணி

மலேஷியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட…

இம்முறை இடம்பெறும் உலகக் கிண்ணத் தொடரில் முன்னாள் சம்பியன் அணியான பாகிஸ்தான், ஆசிய கிண்ண நடப்புச் சம்பியன் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி குழு Dயில் அங்கம் வகிக்கின்றது.

குறித்த தொடருக்கான குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளம் குழாம்

  1. கமிந்து மெண்டிஸ் (அணித் தலைவர் – ரிஷ்மண்ட் கல்லூரி, காலி)
  2. ஜெஹான் டேனியல் (துணைத் தலைவர் – புனித ஜோசப் கல்லுரி, மருதானை)
  3. ஹசித போயகொட (திரித்துவக் கல்லூரி, கண்டி)
  4. திஸரு ரஷ்மிக்க டில்ஷான் (திரித்துவக் கல்லூரி, கண்டி)
  5. கிறிஷான் சஞ்சுல (டி மெசனொட் கல்லூரி, கன்தானை)
  6. கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை)
  7. தனன்ஞய லக்ஷான் (ரிஷ்மண்ட் கல்லூரி, காலி)
  8. பிரவீன் ஜயவிக்ரம (புனித செபஸ்டியன் கல்லூரி, மொறட்டுவை)
  9. நுவனிந்து பெர்ணான்டோ (புனித செபஸ்டியன் கல்லூரி, மொறட்டுவை)
  10. அஷேன் பன்டார (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
  11. ஹரீன் புத்தில (புனித லோசியஸ் கல்லூரி, காலி)
  12. நிபுன் மாலிங்க (மஹிந்த கல்லூரி, காலி)
  13. நிபுன் தனன்ஞய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  14. நிஷான் மதுஷங்க (மொறட்டு மகா வித்தியாலயம்)
  15. சன்தூஷ் குனதிலக்க (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு)

மேலதிக வீரர்கள்

விஷ்வ சதுரங்க (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவை)
ரவிந்து சஞ்சன (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)
ரன்தீர் ரனசிங்க (புனித ஏன்ஸ் கல்லூரி, குருனாகலை)
அயன சிறிவர்தன (இசிபதன கல்லூரி, கொழும்பு)
திலான் ப்ரஷான் (புனித சர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை)