சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்குமிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக துனித் வெல்லாலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 20 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்த வீரர்கள் விபரம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடளாவிய ரீதியில் இருந்து 75 திறமையான வீரர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு கண்டியில் விசேட வதிவிட பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது.
- இலங்கை U19 – பங்களாதேஷ் U19 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
- இலங்கை U19 அணி வீரர்களுக்கு ஒரு இலட்சம் பண வெகுமதி
- இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் A அணி அறிவிப்பு
இதில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 26 வீரர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு வாரங்கள் கொழும்பில் வைத்து மேலதிக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அத்துடன், குறித்த வீரர்களுக்கிடையில் 50 ஓவர்களைக் கொண்ட 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களில் 20 பேர் இம்மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியுடனான ஒருநாள் தொடருக்காக தேர்வாளர்களால் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான துனித் வெல்லாலகே இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டில் தற்போதுள்ள அனுபவமிக்க சகலதுறை வீரர்களில் முதன்மையானவராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
இதுதவிர, ரவீன் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ, ஷெவோன் டேனியல், மதீஷ பத்திரன மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகிய அனுபவ வீரர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற கண்டி திரித்துவக் கல்லூரி மாணவனான மதீஷ பத்திரன, கடந்த ஆண்டு நடைபெற்ற அபுதாபி T10 லீக் தொடரில் பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று (07) நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
மறுபுறத்தில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்கள் இன்று (07) தம்புள்ளை சென்றடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி விபரம்:
- துனித் வெல்லாலகே (அணித் தலைவர் – மருதானை புனித ஜோசப் கல்லூரி)
- ரயன் பெர்னாண்டோ (கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரி)
- ரவீன் டி சில்வா (கொழும்பு நாலந்தா கல்லூரி)
- சதீஷ ராஜபக்ஷ (கொழும்பு றோயல் கல்லூரி)
- ஜீவக சஷீன் (ரத்கம தேவபத்திராஜ கல்லூரி)
- பவன் பத்திராஜ (கண்டி திரித்துவக் கல்லூரி)
- சதீஷ ஜயவர்தன (மருதானை புனித ஜோசப் கல்லூரி)
- சமிந்து விக்ரமசிங்க (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
- வினுஜ ரன்புல் (கொழும்பு நாலந்தா கல்லூரி)
- ஷெவோன் டேனியல் (மருதானை புனித ஜோசப் கல்லூரி)
- ஹரிந்து ஜயசேகர (மாத்தறை புனித தோமையர் கல்லூரி)
- லஹிரு தவடகே (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி)
- சசங்க நிர்மால் (ரத்கம தேவபத்திராஜ கல்லூரி)
- மல்ஷ தருபதி (அம்பாலங்கொட மாதம்பே மத்திய கல்லூரி)
- வனுஜ சஹன் (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி)
- தனால் ஹேமானந்த (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி)
- ட்ரவின் மெத்திவ்ஸ் (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
- யசிரு ரொட்றிகோ (கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரி)
- மதீஷ பத்திரன (கண்டி திரித்துவக் கல்லூரி)
- லஹிரு அபேசிங்க (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…