இளம் தேசிய கால்பந்து அணிக்கான முதல் கட்ட வீரர்கள் தெரிவு நிறைவு

813

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வீரர்கள் தெரிவு இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த வீரர்கள் தெரிவானது நாட்டின் பல பகுதிகளையும் பிரித்து, ஜுன் 13ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் என இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என ஏற்கனவே கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது.

19 வயதின் கீழ் தேசிய அணிக்கான தெரிவு நாளை ஆரம்பம்

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான..

அதற்கமைய முதல் கட்டமாக வட மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மற்றும் வட மேல் மாகாண வீரர்களுக்கான தெரிவு கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த முதல் கட்ட தெரிவுக்காக பல பாகங்களிலிருந்தும் மொத்தமாக 93 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் யாப்பாணம், மன்னார், புத்தளம், பதுள்ளை, கண்டி மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் இருந்து அதிகமான வீரர்கள் பங்கொண்டிருந்தனர்.

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்த மற்றும் முன்னணி கழகங்களில் விளையாடும் அனுபவம் பெற்ற பல வீரர்களும் தேசிய அணியில் இணையும் எதிர்பார்ப்புடன் இத்தெரிவில் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் பிரகாசித்த வீரர்களில், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர் ரஜிகுமார் சான்தன் இந்த தெரிவில் கலந்துகொண்டார். தற்பொழுது 18 வயதின் கீழ் பாடசாலை அணியில் விளையாடும் இவர், கொத்மலே கிண்ணம், பாடசாலைகைளுக்கு இடையிலான டிவிஷன் ll போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிக்கவர்.

அது தவிர இம்முறை FA கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னைய சுற்றுவரை முன்னேறியிருந்த யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகத்தின் முக்கிய முன் கள வீரராகவும் விளையாடி வருகின்றார். அவர் உட்பட மொத்தமாக 5 வீரர்கள் புனித பத்திரிசியார் கல்லூரியில் இருந்து இத்தெரிவிற்கு வருகை தந்திருந்தனர்.

முன்னணி கால்பந்து அணியைக்கொண்ட யாழ்ப்பாணம் ஹென்ரியரசர் கல்லூரியின் பெனடிட் கனிஸ்டன், ஞானசேகரம் அன்டனிராஜ் மற்றும் பிரேம்குமார் சிந்துஜன் போன்ற முன்னணி வீரர்களும் தெரிவில் கலந்துகொண்டனர்.

இதில் முக்கிய வீரராக அன்டனிராஜ் உள்ளார். முன்கள வீரரான இவர் பல வருடங்கள் தேசிய அணிக்கு தொடர்ச்சியாக தெரிவாகிவரும் வீரராக உள்ளார். இலங்கை 16 வயதின் கீழ் அணி சார்பாக ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்து விளையாடிய அனுபவம் பெற்ற இவர், ஆலியன்ஸ் நிறுவனத்தினால் ஜேர்மனியில் வழங்கப்படும் சிறப்பு கால்பந்து பயிற்சியையும் பெற்றவர்.

அக்கல்லூரி அணியின் பின் களத்தைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவரான பிரேம்குமார் சிந்துஜன் தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடியவர். இவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படுவார் எனில், ஏற்கனவே தேசிய அணியில் அங்கம் வகித்த ஜூட் சுபன், மதுசன், அன்டரி ரமேஷ் போன்ற வீரர்களிடமிருந்து பெற்ற அனுபவம் இவருக்கு பெரிதும் கைகொடுக்கும்.

16 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து அணிக்கான தெரிவு இவ்வாரம்

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட..

பெனடிட் கனிஸ்டன், ஹென்ரியரசர் கல்லூரி அண்மையில் பெற்ற பல வெற்றிகளின்போதும் அணியில் அங்கம் வகித்தவர். மத்திய களத்தில் விளையாடும் இவர், முன் களத்தின் வலது புறத்திலும் சிறப்பிக்கக் கூடியவராக உள்ளார்.

இந்த தெரிவில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 20 வீரர்கள் கலந்துகொண்டமையானது, வடக்கின் கால்பந்து வளர்ச்சி அதிகரித்துள்ளமைக்கு மற்றொரு சான்றாக இருந்தது.

இவர்கள் தவிர, இறுதியாக இடம்பெற்ற கொத்மலே கிண்ண சுற்றுப் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறியிருந்த வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் மத்திய கள வீரரான இஷார சந்தருவன் பெர்னாண்டோவும் தெரிவில் கலந்துகொண்டார். இவர் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடும் நிவ் யங்ஸ் அணியின் வீரர் ஒருவரும் கூட.

பயிற்றுவிப்பில் பல வருடகால அனுபவம் கொண்ட சுமித் வல்பொல அவர்கள் குறித்த தொடரில் விளையாடும் இலங்கை இளம் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இவர் இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் செளண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக, மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ரொஹான் விக்ரமரத்ன அவர்களும், கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய அணியின் முன்னாள் கோல் காப்பாளரும், கொழும்பு கால்பந்து கழகத்தின் தற்போதைய கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளருமான லலித் வீரசிங்கவும் செயற்படள்ளனர்.  

இதன் இரண்டாவது கட்டமான தென் மாகாணம் மற்றும் மேல் மாகாண வீரர்களுக்கான தெரிவு எதிர்வரும் 20ஆம் திகதி சிடி கால்பந்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் பல செய்திகளைப் படிக்க