சகல துறையிலும் பிரகாசித்து ஆனந்த கல்லூரி வீரர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இப்போட்டியில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய விஷ்வ சதுரங்க பீரிஸ் தனது அபார சதத்தினால் பிரன்ஸ் ஒப் வேல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தினார்.
மழலைகளின் சமரில் சில்வெஸ்டர் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
கண்டியின் பிரபல கல்லூரிகளான புனித சில்வெஸ்டர் மற்றும் வித்யார்த்த…….
இதன்படி, போட்டி நிறைவடைய ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், முதல் இன்னிங்ஸ் வெற்றியுடன் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
கட்டுனேரியவில் உள்ள செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பாக கமேஷ் நிர்மால் 27 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்தாலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சவிந்து பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும், அவிந்து பெர்னாண்டோ மற்றும் கவுமால் நாணயக்கார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியினர் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
அவ்வணிக்காக நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை இளையோர் அணிக்காக விளையாடிய அனுபவமிக்க இடதுகை துடுப்பாட்ட வீரரான விஷ்வ பீரிஸ் 133 ஓட்டங்களையும், அணித் தலைவர் சவிந்து பீரிஸ் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்.
மொறட்டுவை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் எதிரணியை விட மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றமையினால், ஆட்டத்தின் இரண்டாம் நாளை நடத்தாமல் போட்டியை சமநிலையில் நிறைவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸ் வெற்றியின்மூலம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
112ஆவது வடக்கின் பெரும் சமரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
இலங்கையில் இடம்பெறும் பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் போட்டிகளில்……
இதன்படி, இம்முறை 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற 4ஆவது அணியாக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இணைந்து கொண்டது. இவர்கள், கண்டி திரித்துவக் கல்லூரியுடன் அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 96/10 (29) – கமேஷ் நிர்மால் 27, லஹிரு ஹிரன்ய 23, சவிந்து பீரிஸ் 3/15, அவிந்து பெர்னாண்டோ 2/13, கவுமால் நாணயக்கார 2/23
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 330/8 (64) – விஷ்வ பீரிஸ் 133, சவிந்து பீரிஸ் 60*, சனோஜ் தர்ஷிக 32, சுஹத் மெண்டிஸ் 28, சந்துன் பெர்னாண்டோ 27, அசேல் சிகேரா 3/108
முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.