இலங்கை ரக்பி சம்மேளனமானது, 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை ரக்பி அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை ரஜீவ் பெரேரா மற்றும் இசிபதன கல்லூரி ரக்பி அணியின் தற்போதைய பயிறுவிப்பாளரான லசந்த டி கொஸ்தா ஆகியோருக்கு வழங்கியுள்ளது. எதிர்வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரை கருத்திற்கொண்டு இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரானது புதிய முறையில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மட்டுமே முதற் தர பிரிவில் விளையாடவுள்ளதுடன், சைனீஸ் தாய்பே அணி விளையாடவில்லை. ஆதலால் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள், தத்தமது சொந்த நாட்டில் இரண்டு போட்டிகளில் பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.
இலங்கையில் முதலாவது போட்டி டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, தொடர்ந்து இரண்டாவது போட்டி 16 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டில் நடைபெறவுள்ளது.
நீண்ட காலமாக தேசிய அணியில் பிரதி பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றும் பெரேரா, இவ் இளம் அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்வதற்காக எதிர்பார்த்திருக்கிறார். ஹெவலொக் ரக்பி கழகத்தின் முன்னாள் தலைவரான இவர், இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கழக மட்ட போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் ஓய்வு பெற்றார். எனினும் மறுபடியும் பயிறுவிப்பாளராக ரக்பி களத்திற்குள் நுழைந்தார்.
>கடற்படையை மூழ்கடித்த CR&FC தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்<
பலமுறை இலங்கை தேசிய ரக்பி அணியின் முகாமையாளராக பெரேரா கடமையாற்றியுள்ளதோடு, 2016 ஆம் ஆண்டு கெவின் டிக்சன் தலைமையில் ஆசிய 20 வயதிற்கு உட்பட்ட ரக்பி தொடரில் சம்பியனான இலங்கை அணியின் பிரதி பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நிறைவு பெற்ற ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி தொடரின் ஒரு அங்கமாகவும் இவர் காணப்பட்டார்.
முதன் முறையாக தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், பயிறுவிப்பாளரான லசந்த கொஸ்தாவிற்கு இது சவாலானதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இசிபதன கல்லூரியின் பழைய மாணவரான இவர், பலமுறை இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றவர் ஆவார். தான் விளையாடும் காலத்தில் ப்ளை ஹாப் நிலையில் விளையாடிய இவர், இலங்கை அணிக்காக பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.
இசிபதன கல்லூரியின் பயிறுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் இவர், ரக்பி லீக் மற்றும் மைலோ நொக் அவுட் போட்டிகளில் இசிபதன கல்லூரியை இரண்டாம் இடத்திற்கு அழைத்து சென்றவர் ஆவார்.
ரஜீவ் பெரேரா மற்றும் லசந்த கொஸ்தா ஆகிய இருவரும் இரண்டாம் தரநிலை பயிற்றுவிப்பாளர்கள் என்பதோடு, தற்போது 3 ஆம் தரத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவர்.
இவற்றை உயர் நிலை அதிகாரியான இந்தி மரிக்கார் கண்காணிக்கவுள்ளதோடு, தற்போது இத்தொடரிற்கான பயிற்சி குழாமை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்றுவிப்பாளர்கள் மீது, இலங்கை இளையோர் அணியை கனிஷ்ட ரக்பி உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியின் கடந்த வருட பெறுபேறுகள் சிறப்பானதாக அமையவில்லை. கடந்த வருடம் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்ற இலங்கை அணியானது 3 ஆம் இடத்தையே பெற்றுக்கொண்டது. இவ்வருடம் இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளதால், வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.