2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களிற்கான சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில், பங்குபெறும் இலங்கை தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு இம்மாதம் (ஜூன்) 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் சிட்டி கால்பந்து தொகுதி மைதானத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னதாக, இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் (FFSL) ஒழுங்கு செய்யப்பட்ட வீரர்கள் தெரிவு மே மாதம், 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறுவதாக உத்தேசிக்கப்பட்டு இருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணத்தினால் அப்போது நடைபெறவிருந்த தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தெரிவில் பங்குபற்றும் வீரர்கள், 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகக் காணப்படுகின்றது. தெரிவில் பங்கேற்கும் வீரர்கள் குறித்த பிரதேசங்களிலிருந்து கீழ்வரும் நேரசூசிக்கு அமைவாக குறிப்பிட்ட நேரத்தில் மைதானத்திற்கு சமூகம் தருதல் வேண்டும்.
17 ஆம் திகதி ஜூன் காலை 7.30 மணி – சிட்டி கால்பந்து தொகுதி மைதானம்
வட மாகாணம் – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, வெலிகாமம், மன்னார், பருத்தித்துறை
கிழக்கு மாகாணம் – திரிகோணமலை, மூதூர், கிண்ணியா, குச்சவெளி, மட்டக்களப்பு, அம்பாறை, காத்தான்குடி
மத்திய மாகாணம் – கண்டி, கம்பளை, நாவலப்பிட்டிய, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணம் – அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், சிலாபம், வென்னப்புவ, குருநாகல், கேகாலை
18 ஆம் திகதி ஜுன் காலை 7.30 மணி
தென் மாகாணம் – அம்பலாங்கொடை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, கதிர்காமம், தங்கல்லை, அவிஸ்ஸாவெல்லை, இரத்தினபுரி
மேல் மாகாணம் – நீர் கொழும்பு, ஜா-எல, கந்தானை, வத்தளை, கம்பஹா, களனி, கிரிபத்கொடை, கொழும்பு, கோட்டை, ரத்மலான, மொரட்டுவ, பாணதுறை, களுத்துறை, பேருவளை
இத்தொடரில், முதற்தடவையாக பங்கேற்கும் இலங்கை அணியானது, குழு A இல் உஸ்பகிஸ்தான், சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆகிய அணிகளுடன் காணப்படுகின்றது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகளில் உஸ்பகிஸ்தான் ஐந்தாவது இடத்தையும், சவுதி அரேபியா பதினாறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இடம்பெறும் போட்டித் தொடரில், ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இடத்தைப் பெறும் 10 அணிகளும், அதிக புள்ளிகளுடன் குழு நிலையில் இரண்டாவது இடத்தைப் பெறும் 5 அணிகளும் போட்டியை நடாத்தும் நாடுகளின் அணிகளுடன் இணைந்து இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும்.
2018 ஆம் ஆண்டிற்கான 16 வயதுக்கு உட்பட்ட, ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரிற்கான தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம், 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.