இலங்கை அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால பரிந்துரைத்துள்ளார். கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பொதுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“எனது அணியை பாகிஸ்தான் அழைத்துச் செல்வதில் நான் ஆர்வமாக உள்ளேன்” என்று குறிப்பிட்ட திலங்க சுமதிபால, “எமது பாதுகாப்பு நிபுணர்களின் மதிப்பீட்டின்படி அங்கு சாதகமான சூழலே காணப்படுகிறது. நாடெங்கும் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் கண்டிருப்பதோடு குறிப்பாக லாகூரில் பாதுகாப்பான சூழல் இருப்பதாக நம்புகின்றனர். வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று T-20 போட்டிகளில் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளில் குறைந்தது ஒரு ஆட்டத்தை லாகூரில் விளையாட எதிர்பார்த்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிக்கான இந்திய குழாமில்..
இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது, “பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு உங்களின் ஆதரவை தரும்படி அங்கத்தவர்கள் என்ற வகையில் உங்கள் ஒவ்வருவரிடமும் நான் போரிக்கை விடுகின்றேன். எப்போதும் ஆபத்து இருக்கத்தான் செய்யும். சம்பியன்ஸ் கிண்ணத்தின்போது லண்டனில் இரு தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையிலும் ஐ.சி.சி. பாதுகாப்பு உறுதிப்பாட்டின் கீழ் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. அதேபோன்று, ஆசியாவின் கிரிக்கெட் குடும்பம் என்ற வகையில் எமது அங்கத்துவ நாடுகளுடன் முடிந்தவரை இணக்கத்துடனும் புரிதலுடனும் செயற்பட்டு அவர்களுக்கு நாம் முழு ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.
சுமதிபாலவின் கருத்துகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் தற்போதைய ACC தலைவருமான நஜாம் சாதி, நாட்டின் பாதுகாப்பு குறித்து விளக்கியதோடு, பாகிஸ்தானின் கண்காணிப்பு முறை குறித்தும் குறிப்பிட்டார். அத்துடன் பாகிஸ்தான் 10 பில்லியன் ரூபாய் (பாகிஸ்தான் நாணயம்) செலவு கொண்ட ‘பாதுகாப்பு நகர்’ திட்டத்தின் ஒரு உறுப்பினர் என்றும் அவர் விளக்கினார்.
பாதுகாப்பு நகர் என்பது நவீன நகரங்களின் குற்றச்செயல்கள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இருப்பதாகவும் விளக்கிய அவர் ரோந்து நடவடிக்கைகள் மூலம் நாட்டின் கண்காணிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் மேலாண்மையை பலப்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான T-20 மோதல் அடுத்த மாதத்தில்
இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC), அண்மையில் நாட்டில்..
அனைத்து செயல்முறைகளும் முறையாக இடம்பெறும்பட்சத்தில் இலங்கை அணி இந்த ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தானில் விளையாட எதிர்பார்த்திருக்கும் மூன்று T-20 களில் குறைந்தது ஒரு போட்டி லாகூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு லாகூர் நகரிலேயே இலங்கை அணி மீதான தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.