ரங்கன ஹேரத் தலைமையில் ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு ஜிம்பாப்வே அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் அதன்பின் மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கு கொள்ளும் முக்கோணச் சுற்றுத் தொடர் என்பவற்றிலும் பங்குகொள்ளவுள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள இந்த இரண்டு போட்டித் தொடர்களுக்குமான பிரதான அனுசரணையை, வீடு மனை விற்பனை ஜாம்பவான்களான புளுமௌண்டன் அச்சீலியோன் தனியார் நிறுவனம் வழங்கவிருக்கின்றது.
இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. அதில் புளுமௌண்டன் குழுமத்தின் பணிப்பாளர் Dr. ஹிரான் ஹெட்டியாரச்சி கருத்து தெரிவிக்கையில், ”ஜிம்பாப்வேயில் இலங்கை அணி பங்கு கொள்ளும் தொடர்களுக்கு அனுசரணை வழங்கக் கிடைத்ததையிட்டி நாம் பெருமை அடைகிறோம்.
எமது நாட்டின் உயிர் நாடியான கிரிக்கெட் விளையாட்டுடன் எம்மை தொடர்பு படுத்திக் கொள்வதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இளம் வீரர்களைக் கொண்டுள்ள இலங்கை அணி பங்குகொள்ளும் தொடரில் எமது பங்களிப்பையும் வழங்கக் கிடைத்தமையை எமக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி பங்கு கொள்ளும் முதலாவது டெஸ்ட் போட்டி, ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் திகதி முதல் 1௦ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முக்கோணக் கிரிக்கெட் தொடரை நவம்பர் 14ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.