மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில், சுழல் பந்துவீச்சாளர்களின் முழுமையான பங்களிப்பு, தனுஷ்க குணதிலக்க மற்றும் பெதும் நிசங்கவின் ஆரம்ப இணைப்பாட்டம் என்பவற்றின் ஊடாக இலங்கை அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணியில் நுவான் பிரீதீப்புக்கு பதிலாக லக்ஷான் சந்தகன் இணைக்கப்பட்டதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி மாற்றங்களின்றி களமிறங்கியது.
>> மேஜர் T-20 லீக்கில் லஹிரு உதார அரைச்சதம்: 5 விக்கெட்டுக்களை எடுத்த ரொஸ்கோ
இலங்கை அணி
நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, பெதும் நிசங்க, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அஷேன் பண்டார, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன்
மேற்கிந்திய தீவுகள் அணி
லெண்டல் சிம்மன்ஸ், எவின் லிவிஸ், க்ரிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (தலைவர்), ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், டுவைன் பிராவோ, கெவின் சென்கிலையர், ஒபெட் மெக்கோஸ், பிடெல் எட்வர்ட்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நிரோஷன் டிக்வெல்லவுக்கு, பதிலாக புதுமுக வீரர் பெதும் நிசங்க களமிறங்கினார். ஆரம்ப விக்கெட்டுக்காக மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெதும் நிசங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் வழங்கினர்.
தனுஷ்க குணதிலக்க தன்னுடைய 3வது T20I அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன், இலங்கை அணி 10 ஓவர்களில் விக்கெட்டிழப்பின்றி 96 ஓட்டங்களை குவித்தது. பின்னர், ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றிருந்த பெதும் நிசங்க ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க, டுவைன் ப்ராவோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்காக அதிசிறந்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்ட போதும், இலங்கை அணியின் மத்தியவரிசை வீரர்கள் ஏமாற்றத்தை வழங்கினர். தொடர்ச்சியாக வருகைத்தந்த அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் ஓட்டங்களை பெறாமல், ஏமாற்றமளிக்க, ஓட்டவேகமும் குறைவடைந்தது.
புதுமுக வீரர் அஷேன் பண்டார 19 பந்துகளில் 21 ஓட்டங்களையும், இறுதிக்கட்டத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 11 பந்துகளில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்கள் என்ற போட்டி கொடுக்கக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் டுவைன் ப்ராவோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறியதுடன், அந்த அணி 18.4 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
முதல் போட்டியில் அதிரடியான ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், இந்தப்போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் மிக துள்ளியமாக பந்துவீசி ஓட்டங்களை கட்டுப்படுத்தினர். அதுமாத்திரமின்றி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக பத்தாம் இலக்க துடுப்பாட்ட வீரர் ஒபெட் மெக்கோய் அதிகபட்சமாக 7 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றதுடன், லெண்டல் சிம்மன்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்கள், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிகமாக நெருக்கடி கொடுத்திருந்த நிலையில், வேகத்தில் துஷ்மந்த சமீர மிரட்டியிருந்தார். அதிகபட்சமாக லக்ஷான் சந்தகன் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
>> வீரர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு மூலோபாயம் அமுல்படுத்தப்படும் – மஹேல ஜயவர்தன
இலங்கை அணி கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து T20I தொடர் வெற்றியை பெற்றிருந்தது. அதற்கு பின்னர் நடைபெற்ற 8 T20I போட்டிகளில் தோல்வியுற்றிருந்த நிலையில், இன்றைய தினம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் T20I போட்டியொன்றில் வெற்றியை தக்கவைத்துள்ளது.
தொடரில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட இந்த வெற்றியுடன் 1-1 என தொடர் சமனிலையை எட்டியுள்ளதுடன், தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டி நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<