இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக பெற்ற ஒருநாள் தொடர் வெற்றியை தொடர்ந்து, இந்த தொடர் வெற்றியை மே.தீவுகள் அணி பதிவுசெய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. மே.தீவுகள் அணி மாற்றங்களின்றி களமிறங்கிய நிலையில், இலங்கை அணியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பிய அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக ஓசத பெர்னாண்டோவும், கமிந்து மெண்டிஸிற்கு பதிலாக திசர பெரேராவும் இணைக்கப்பட்டனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குணதிலக்கவின் ஆட்டமிழப்பு!
இலங்கை அணி
தனுஷ்க குணதிலக்க, திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிசங்க, தினேஷ் சந்திமால், ஓசத பெர்னாண்டோ, அஷேன் பண்டார, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப்
மேற்கிந்திய தீவுகள் அணி
ஷேய் ஹோப், எவின் லிவிஸ், டெரன் ப்ராவோ, நிக்கோலஸ் பூரன், ஜேசன் மொஹமட், கீரன் பொல்லார்ட், அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், அல்ஷாரி ஜோசப், ரொமாரியோ ஷெபர்ட்
முதல் ஒருநாள் போட்டியில், சவாலான இலக்கை நிர்ணயிக்க தவறிய விடயத்தை கருத்திற்கொண்டு இலங்கை அணி களமிறங்கிய போதும் திமுத் கருணாரத்ன, பெதும் நிசங்க மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறினர். இதனால், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால், முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்த தனுஷ்க குணதிலக்க மே.தீவுகள் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். மறுமுனையில், தினேஷ் சந்திமால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும், 96 ஓட்டங்களை பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க தன்னுடைய 3வது ஒருநாள் சதத்தை அடைய முடியாமல், ஜேசன் மொஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமடைந்தார். தொடர்ந்து, தினேஷ் சந்திமால் அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆட்டத்தின் இறுதியில் திசர பெரேராவுடன் இணைந்த வனிந்து ஹசரங்க 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், திசர பெரேரா 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதனடிப்படையில், இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மே.தீவுகள் சார்பாக ஜேசன் மொஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, எவின் லிவிஸ் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரின் முதல் விக்கெட்டுக்கான 192 என்ற இணைப்பாட்டத்தின் உதவியுடன் 49.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை மிகவும் இலகுவாக எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான எவின் லிவிஸ் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
அதில், எவின் லிவிஸ் தன்னுடைய மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஷேய் ஹோப் சதத்தை தவறவிட்டு 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், இவர்களின் இணைப்பாட்டம் மே.தீவுகளின் வெற்றியிலக்கை இலகுவாக்கியது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய மே.தீவுகள்
தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச்செய்த போதும், நிக்கோலஸ் பூரனின் துடுப்பாட்டம் மற்றும் நுவான் பிரதீப்பின் கடைசி இரண்டு ஓவர்கள் என்பவற்றால் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை விளாசியதுடன், நுவான் பிரதீப் வீசிய 48 ஓவரில் 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கப்பட்டதால், இலங்கை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், நுவான் பிரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளின் இந்த வெற்றியின் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், இரண்டு போட்டிகள் நிறைவில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளதுடன், ஏற்கனவே T20I தொடரையும் கைப்பற்றியிருந்தது. இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க