இலங்கையுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு தென்னாபிரிக்காவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை

1803
sl vs sa

கேப்டவுன், நியூலண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுற்ற நிலையில், போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றுவதற்கு இன்னும் 6 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்த வேண்டியுள்ளது.

நேற்றைய நாள் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ஆட்ட நேர நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிறப்பாக துடுப்பாடியிருந்த ஸ்டெபான் குக் மற்றும் டீன் எல்கர் தங்களுக்கிடையில் 29 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.

இன்றைய நாள் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, அவ்வணியின் முதல் விக்கெட்டாக ஸ்டெபான் குக் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஐந்து பந்துகளின் பின்னர் மீண்டும் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் ஹஷிம் அம்லா ஓட்டம் எதுவும் பெறாமலே விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் சதம் பெற்ற டீன் எல்கர் இரண்டாம் இன்னிங்சுக்காக 82 பந்துகளை எதிர் கொண்டு 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 55 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஜேபி டுமினி மதிய போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் 30 ஓட்டங்களுடன் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

அத்துடன் தென்னாபிரிக்க அணித் தலைவர் டு ப்லெசிஸ் 41 ஓட்டங்களுடன் சுரங் லக்மாலின் பந்து வீச்சிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய குவிண்டன் டி கொக் இளம் பந்து வீச்சாளார் லஹிறு குமாரவின் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து சென்றனர். அதன் பின்னர் தொடர்ந்து துடுப்பாடிய கேஷவ் மகாராஜ் மற்றும் பிலாண்டர் வேகமாக  ஓட்டங்களை குவிக்க தொடங்கினர். 224 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் தென்னாபிரிக்க அணித் தலைவர் டு ப்லெசிஸ் ஆட்டத்தினை நிறுத்தி இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக டீன் எல்கர் 55 ஓட்டங்களையும் டு ப்லெசிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த தென்னாபிரிக்க ஆடுகளத்தில் இலங்கை அணிக்கு வெற்றிபெற சாத்தியமில்லாத 507 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணியினால் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை அணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 6வது ஓவரில் வெர்னன் பிலாண்டரின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணி சார்பாக கௌஷல் சில்வா 29 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களுடனும் துணைத் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர். மேலும், இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், 6 விக்கெட்டுகள் கையிருப்பில் இலங்கை அணிக்கு வெற்றிபெற இன்னும் 377 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக வெர்னன் பிலெண்டர் மற்றும் ககிஸோ ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம் :

தென்னாபிரிக்கா – முதல் இன்னிங்ஸ்

Sa 1st inn

இலங்கை – முதல் இன்னிங்ஸ்

SL 1st inn - 2nd test

தென்னாபிரிக்கா – இரண்டாவது இன்னிங்ஸ்

2nd INN - SA

இலங்கை – இரண்டாவது இன்னிங்ஸ்

sl 2nd innPNG