சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், தென்னாபிரிக்க அணி சரிவிலிருந்து மீண்டு நல்ல நிலையில் காணப்படுகின்றது.
Read : சந்திமால் – தனன்ஞய இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக தென்னாபிரிக்க, இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (26) செஞ்சூரியன் நகரில் ஆரம்பமாகியதுடன், போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 85 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களுடன் பலமான நிலையிலும் காணப்பட்டிருந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானக்க 25 ஓட்டங்களுடன் காணப்பட்டிருக்க, கசுன் ராஜித 7 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பின்னர், போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் முதல் நாளில் இலங்கை அணிக்காக அரைச்சதம் பெற்று தசை உபாதையினால் மைதானத்தினை விட்டு வெளியேறிய தனன்ஞய டி சில்வா உபாதையின் உக்கிரம் காரணமாக போட்டியில் இருந்து முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தனன்ஞய டி சில்வாவின் இன்னிங்ஸ் 79 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது. தனன்ஞய டி சில்வா தனது துடுப்பாட்டத்தில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பவற்றினை பெற்றிருந்தார்.
இதனையடுத்து தொடர்ந்து சென்ற இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசை வீரர்கள் ஏமாற்றினாலும், தசுன் ஷானக்க டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அரைச்சத உதவியுடன் இலங்கை அணி, இரண்டாம் நாளின் மதிய இடைவேளைக்கு முன்பாக தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 96 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 396 ஓட்டங்களுடன் நிறைவு செய்து கொண்டது.
Also Read – ICC இன் இந்த தசாப்தத்திற்கான அணிகளில் சங்கா, மாலிங்க
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானக்க 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 87 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் அறிமுக வீரரான லுத்தோ சிபம்லா 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு டீன் எல்கார், எய்டன் மார்க்ரம் ஜோடி சிறந்த தொடக்கத்தினை வழங்கியது. அந்தவகையில், இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளை வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்தில் இரு வீரர்களும் 141 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த எய்டன் மார்க்ரம் டெஸ்ட் போட்டிகளில் தனது 7ஆவது அரைச்சதத்துடன் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவரின் விக்கெட்டினை இலங்கை அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாந்து கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், இரண்டாம் நாளின் மூன்றாம் இடைவெளியில் சதத்தினை நெருங்கிய டீன் எல்காரின் விக்கெட்டும் தசுன் ஷானக்கவின் அபார பந்துவீச்சு மற்றும் பிடியெடுப்பினால் பறிபோனது. டீன் எல்கார் 16 பௌண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்று சதத்தினை 5 ஓட்டங்களைினால் தவறவிட்டிருந்தார்.
எல்காரினை அடுத்து தென்னாபிரிக்க அணி சிறு தடுமாற்றம் ஒன்றினைக் காண்பித்த போதும் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் டெம்பா பெவுமா ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தினால் அவ்வணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 72 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 314 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
Also Read – தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் தனன்ஞய டி சில்வா
அதன்படி, இலங்கையை விட 79 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கிக் காணப்படும் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் பாப் டு பிளேசிஸ் 55 ஓட்டங்களுடனும், டெம்பா பெவுமா 41 ஓட்டங்களுடனும் இருக்கின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தசுன் ஷானக்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
இரண்டாம் நாள் ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க