பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு தொடர்பிலான பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர், இலங்கை அணியானது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை உறுதிசெய்திருந்ததுடன், 24ஆம் திகதி பாகிஸ்தானை சென்றடைந்தது. அதேநேரம், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கராச்சி மைதானமானது முதல் ஒருநாள் போட்டியை நடத்தவிருக்கிறது.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவிருக்கும்…
பாகிஸ்தானுக்கு மீண்டும் கிரிக்கெட்டை கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில், இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பாதுகாப்பு காரணமாக அங்கு செல்லவில்லை. எனினும், லஹிரு திரிமான்ன தலைமையிலான ஒருநாள் அணி மற்றும் தசுன் ஷானக தலைமையிலான T20 அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது
இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் மாத்திரமே விளையாடியிருந்தது. ஆனால், இம்முறை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இந்த ஒருநாள் தொடரை பொருத்தவரை இரண்டு அணிகளும் சில மாற்றங்களுடன் கூடிய, சற்று அனுபவம் குறைந்த அணிகளாகவே களமிறங்கியுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு காரணமாக இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சுற்றுத் தொடரில் பங்கேற்கவில்லை என்பதுடன், பாகிஸ்தான் அணியில் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முக்கிய சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, உலகக் கிண்ணத்தில் சிறப்பாக பந்துவீசிய, சஹீன் அப்ரிடி சுகயீனம் காரணமாகவும், ஹசன் அலி உபாதை காரணமாகவும் வெளியேறியுள்ளனர். அதேநேரம், அனுபவ வீரர் மொஹமட் ஹபீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், ஒருநாள் போட்டிகளுக்காக சர்பராஸ் அஹமட் தலைமையிலான பலமான அணியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியானது இலங்கை அணிக்கு தங்களுடைய சொந்த மண்ணில் கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி தங்களுடைய வழமையான அணித் தலைவர் இல்லாமையினால், அனுபவ வீரர் லஹிரு திரிமான்னவை பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தலைவராக நியமித்துள்ளது. இலங்கை அணியை பொருத்தவரை, முன்னணி வீரர்கள் இல்லாவிடினும், புதிய வீரர்களுக்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த மினோத் பானுக, அஞ்செலோ பெரேரா ஆகியோருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதுடன், போட்டித் தன்மை காரணமாக அணியில் இடம் கிடைக்காமலிருந்த ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இந்த தொடரில் பிரகாசிக்க வேண்டியுள்ளது.
இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய பாகிஸ்தான்…
எனவே, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்களை இழந்திருந்தாலும், புத்துணர்ச்சியுடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை சிறந்த முறையில் நிறைவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளதும் கடந்தகால மோதல்கள்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடந்தகால ஒருநாள் போட்டி மோதல்களில், இரண்டு அணிகளும் மொத்தமாக 153 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் அணி 90 வெற்றிகளையும் இலங்கை அணி 58 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையில் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள 28 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 16 வெற்றிகளை பதிவுசெய்துள்ளதுடன், இலங்கை அணி 12 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில், இம்முறை ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள கராச்சி மைதானத்தில் இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் மோதியுள்ளதுடன், 5 வெற்றிகளை பாகிஸ்தான் அணியும், இலங்கை 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
குறிப்பாக கராச்சி மைதானத்தில் இறுதியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி, 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
அவிஷ்க பெர்னாண்டோ
அவிஷ்க பெர்னாண்டோ அணியின் இளம் வீரராக இருந்தாலும், இவரது கடந்தகால துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்திருந்தது.
உலகக் கிண்ணம் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவிஷ்க பெர்னாண்டோ அணிக்கு தேவையான முறையில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன், பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் தொடர்ச்சியாக குழாத்தில் இருக்காத வீரர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில், அணிக்காக ஓட்டங்களை குவிக்க வேண்டிய முக்கிய வீரராகவும் இவர் பார்க்கப்படுகிறார்.
பாபர் அசாம்
பாகிஸ்தான் அணியின் புதிய உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம், அந்த அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முக்கிய துடுப்பாட்ட வீரராக உள்ளார்.
உலகக் கிண்ணத் தொடர் மற்றும் ஏனைய முக்கிய தொடர்களில் அணிக்காக ஓட்டங்களை குவித்து வரும் இவர், இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர். பாகிஸ்தான் அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3213 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், அவரது ஓட்ட சராசரி 53.55 என்பது மிக முக்கிய அம்சமாகும். இது இவ்வாறிருக்க சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு மேலும் சவால் கொடுக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான அணி விபரங்கள்
இலங்கை குழாம்
லஹிரு திரிமான்ன (அணித் தலைவர்), தனுஷ்க குணதிலக்க, மினோத் பானுக்க, கசுன் ராஜித, தசுன் ஷானக, இசுரு உதான, அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய, சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, வனிந்து ஹசரங்க, நுவன் பிரதீப்
பாகிஸ்தான் குழாம்
இமாம்–உல்–ஹக், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பக்கார் சமான், ஆபித் அலி, பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், ஆசிப் அலி, மொஹமட் றிஸ்வான், இமாத் வஸீம், மொஹமட் நவாஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், உஸ்மான் ஷின்வாரி
பாகிஸ்தான் காலநிலை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் கராச்சி – தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போது பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், போட்டிகளில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருக்கும் இலங்கை அணி இளம் மற்றும் அனுபவம் குறைந்த வீரர்களுடன் விளையாடவுள்ளது. இவ்வாறான இலங்கை அணியை பலமான பாகிஸ்தான் அணி எதிர்கொள்வது அவர்களுக்கு இலகுவாக அமையும். எனினும், புத்துணர்ச்சியுடன் சென்றிருக்கும் இலங்கை அணி திடீர் எழுச்சி பெறவும், அதிர்ச்சி முடிவுகளையும் தரக்கூடிய அணி. எனவே, பாகிஸ்தான் அணிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<