யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயாராக உள்ள குனத்திலக்க

174
DANUSHKA GUNATHILAKA

உபாதைக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்து சதமடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க, தான் யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 

பாகிஸ்தான்இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று (02) நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனுஷ்க குணதிலக்கவின் அபார சதத்தின உதவியுடன், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களைக் குவித்தது

இரண்டாவது ஒருநாள் போட்டியில் போராடி தோற்றது இலங்கை

கராச்சியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு..

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, பக்கர் சமான் மற்றும் ஆபித் அலியின் அரைச் சதங்களின் உதவியுடன் 48.2 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது

இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இலங்கை ஒருநாள் அணியில் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இடம்பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க, தனது 2ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்திருந்ததுடன், பாகிஸ்தான் மண்ணில் அதிகபட்ச ஒருநாள் ஓட்டங்களைக் (133) குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்

இதேநேரம், இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்து சதமடிக்க கிடைத்தமை தொடர்பில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தனுஷ்க குணலதிக்க,

உபாதை காரணமாக எனக்கு இலங்கை அணியில் அண்மைக்காலமாக  இடம்பெற முடியாமல் போனது. எனவே சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினேன். இந்த வாய்ப்பு எனக்கு மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைந்ததுடன், அதை நான் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டேன்

நான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின் போது உபாதைக்குள்ளாகினேன். அதன்பிறகு சுமார் 5 மாதங்கள் என்னால் விளையாட முடியாமல் போனது. அதேபோல, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் துடுப்பாட்ட பயிற்சிகளையும் ஆரம்பித்தேன்என தெரிவித்தார்

அதேபோல, இலங்கை அணிக்காக 3 வகை போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். தேர்வாளர்களின் கைகளில் தான் அது தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

மேலும், இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக நாம் சிறப்பாக விளையாடினோம். பாகிஸ்தான் மிகவும் பலமிக்க அணியாக களமிறங்கியது. ஆனாலும், அவர்களுக்கு நாங்கள் சிறந்த போட்டியொன்றைக் கொடுத்தோம்

ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தனர். எனவே இந்தத் தொடரின் மூலம் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிந்ததுஎன்றார்

இதனிடையே, இலங்கை அணி இந்தப் போட்டியில் தோல்வியடைவதற்கு எந்த இடத்தில் தவறிழைத்தது என எழுப்பிய கேள்விக்கு தனுஷ்க பதிலளிக்கையில்

என்னைப் பொறுத்தமட்டில் முதல் 10 ஓவர்களில் தான் நாம் கோட்டை விட்டோம். முதல் 10 முதல் 15 ஓவர்களில் நாங்கள் நிறைய இலகு பந்துகளை வீசினோம். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் இலகுவாக ஓட்டங்களைக் குவித்தனர். அதேபோல, புதிய பந்தின் சாதகத்தை எம்மால் எடுக்க முடியாமல் போனது

அதிலும் குறிப்பாக களத்தடுப்பில் எம்மால் 100 சதவீத பங்களிப்பினை வழங்க முடியாமல் போனது. அந்த தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன்

இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள்..

ஆனாலும், 47 ஓவர்கள் வரை நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருந்தோம் எனினும், எம்மால் வெற்றிபெற முடியாமல் போனது கவலையளிக்கிறது

எதுஎவ்வாறாயினும், கடைசி 2 போட்டிகளிலும் அணியில் உள்ள ஒருசில வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அணியில் இடம்பெற்ற வீரர்களில் பெரும்பாலானோர் 15இற்கும் குறைவான போட்டிகளில் மாத்திரம் தான் விளையாடியுள்ளனர்

இதில் 3 அல்லது 4 வீரர்கள் தவிர மற்றைய எல்லா வீரர்களும் மின்னொளியில் விளையாடிய அனுபவத்தைக் கூட கொண்டிருக்கவில்லை. அவர்களும் மனஅழுத்தத்துக்கு மத்தியில் தான் விளையாடியிருந்தனர்

எனினும், தோல்விக்கு அதை காரணமாக கூற முடியாது. எதிர்வரும் காலங்களில் இன்னும் போட்டிகளில் அவர்கள் விளையாடும் போது இவ்வாறான தவுறுகளை திருத்திக் கொள்வார்கள்என்றார்

இதேநேரம், சதமடித்தும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது கவலையளிக்கின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

இல்லை. நாங்கள் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் களமிறங்கினோம். ஆனால் துரதிஷ்டவசமாக அதை செய்ய முடியாமல் போனது

அதேபால, கராச்சி மைதானத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு பாபர் அசாம் பாகிஸ்தானுக்காக சதமடித்தது போல நானும் இலங்கை அணிக்காக சதமடித்தேன். எனவே இருவருடைய சதங்களும் முக்கிய ஒரு சாதனையாக இருக்கும் என நம்புகிறேன்”. 

இலங்கை அணியில் எந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் விளையாடுவதற்கு இலகுவாக இருக்கின்றது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

என்னால் அவ்வாறு ஒரு வீரரை மாத்திரம் பெயரிட்டு கூறமுடியாது. எனினும், எந்த வீரருடன் நான் களமிறங்கினாலும் ஓட்டங்களைக் குவிப்பதற்கு தான் எதிர்பார்ப்பேன். நான் திலகரத்ன டில்ஷானுடனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியுள்ளேன். அந்த அனுபவமும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது

இதேவேளை, டி-20 போட்டிக்கு மிகவும் சிறந்த அணியொன்று எம்மிடம் உள்ளது. டி-20 போட்டிகளுக்கென்றே சிறந்து விளங்குகின்ற ஒருசில முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே பாகிஸ்தான் அணிக்கு சிறந்த போட்டியொன்றைக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்என தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான பலம் பொருந்திய அணிக்கு எதிராக அவர்கள் விளையாடிய விதம் குறித்து உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் கூறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<