சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஒவ்வொரு தருணங்களுக்கும் ஏற்ப தம்முடைய துடுப்பாட்ட பிரகாசிப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.
உபாதை காரணமாக இலங்கை அணியிலிருந்து வெளியேறியிருந்த குசல் பெரேரா, சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியிருந்தார்.
>> IPL தொடரிலிருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியது மாத்திரமின்றி நியூசிலாந்துக்கு எதிரான முதல் T20i போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று அரைச்சதம் ஒன்றையும் பதிவுசெய்து அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இந்தநிலையில் இளம் வீரர்களுக்கு தன்னுடைய அனுபவம் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொண்ட குசல் பெரேரா,
“அனுபவம் என்பது ஒவ்வொரு தருணத்துக்கும் வேறுபடும். அதிக இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் என்னிடம் கேட்கும்போது, தருணங்களுக்கு ஏற்ப எவ்வாறு விளையாடுவது என்பதை பழகிக்கொள்ளவேண்டும் என கூறுவேன்.
பந்துவீச்சாளர்கள் நாம் விரும்புவதைப் போன்று பந்துவீச மாட்டார்கள். அவர்கள் எம்முடைய பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்திருப்பார்கள். நாம் சற்று புத்திசாலித்தனமாக ஆடவேண்டும். எனவே பந்துவீச்சாளர்களை சரியாக கணித்து புத்திசாலித்தனமாக ஆடவேண்டும் என இளம் வீரர்களுக்கு கூறுவேன்” என்றார்.
அதேநேரம், சுபர் ஓவரில் மஹீஷ் தீக்ஷனவின் ஓவர் அணியின் வெற்றியை இலகுவாக்கியதுடன், சரித் அசலங்க நேர்மறையான எண்ணத்துடன் ஆடி வெற்றியை உறுதி செய்தார் என்பதை வெளிப்படுத்திய குசல் பெரேரா, சுபர் ஓவரின் போது அணியின் துடுப்பாட்ட திட்டம் தொடர்பிலும் வெளிப்படுத்தினார்.
“சுபர் ஓவரின் போது 8 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது. எனவே அணித்தலைவருடன் இணைந்து துடுப்பாட்ட வீரர்கள் ஓடி ஓட்டங்களை பெறவேண்டும் என திட்டமிட்டோம். எமக்கு ஒரு பௌண்டரி மாத்திரமே தேவைப்பட்டது.
சரித் அசலங்க இரண்டாவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை பெற்றதன் காரணமாக போட்டி எமது பக்கம் திரும்பியது. சுபர் ஓவரில் 2 விக்கெட்டுகள் இழக்கப்பட்டால் போட்டி முடிந்துவிடும். அசலங்க சிக்ஸர் ஒன்றை அடித்திருந்தாலும் மீதமுள்ள 2 ஓட்டங்களின் போட்டி எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், அவர் சிறப்பாக போட்டியை நிறைவுசெய்தார்” என மேலும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் T20i போட்டியில் இலங்கை அணி சுபர் ஓவரில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<