நிரோஷன் டிக்வெல்லவின் வாய்ப்பு பறிபோகுமா? – திமுத் கருணாரத்ன!

Sri Lanka tour of New Zealand 2023

702
Dimuth Karunaratne pre-series press conference

இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெல்ல நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரகாசிக்க தவறும் பட்சத்தில் புதுமுக வீரர் நிசான் மதுஷ்கவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

>> தீர்மானமிக்க டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இலங்கை என்ன செய்யும்?

உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்திவந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிசான் மதுஷ்கவுக்கு முதன்முறையாக தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேநேரம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுவரும் நிரோஷன் டிக்வெல்லவின் பிரகாசிப்புகள் துடுப்பாட்டத்தை பொருத்தவரை மிகச்சிறப்பாக இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 இன்னிங்ஸ்களை ஆடியுள்ள இவர் 22 அரைச்சதங்களை மாத்திரமே பெற்றுள்ளதுடன், சதமொன்றினை இதுவரை பதிவுசெய்யவில்லை.

இவ்வாறான நிலையில் நிரோஷன் டிக்வெல்லவின் இடம் தொடர்பில் திமுத் கருணாரத்ன குறிப்பிடுகையில், “நிரோஷன் டிக்வெல்லவை நாம் விக்கெட் காப்பாளராக பார்க்கிறோம். இப்போது இருக்கும் விக்கெட் காப்பாளர்களில் அவர் உயரிய இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது நல்ல விக்கெட் காப்பாளர் ஒருவர் தேவை. கடந்த காலத்தில் குமார் சங்கக்கார அணியில் இருந்தும், விக்கெட் காப்பாளராக பிரசன்ன ஜயவர்தன செயற்பட்டார்.

ஒருநாள் மற்றும் T20i போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்ல விக்கெட் காப்பாளர் தேவை. துடுப்பாட்டத்தை பொருத்தவரை டிக்வெல்ல மிகப்பெரிய ஓட்டங்களை பெறவில்லை. இருந்தாலும் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.

நாம் நிரோஷன் டிக்வெல்லவுடன் விளையாட எதிர்பார்க்கிறோம். அவருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கிறோம். நிசான் மதுஷ்க அணிக்குள் வந்துள்ளார். எனவே பிரகாசிப்புகள் கிடைக்காவிடின் நிரோஷன் டிக்வெல்லவுக்கு பதிலாக நிசான் மதுஷ்கவுக்கு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாட முடியும்” என்றார்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை (09) அதிகாலை 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<