மலர்ந்திருக்கும் புத்தாண்டில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் முதல் தொடராக இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் அமைகின்றது.
அந்தவகையில் இந்த T20 தொடரின் முதல் போட்டி நாளை (03) மும்பை வங்கடே சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகுகின்றது.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்த இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்பினை தவறவிட்ட போதும் 2022ஆம் ஆண்டில் அதிக T20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக காணப்படுகின்றது.
>> 2022ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் எப்படி இருந்தது?
மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் 2022ஆம் ஆண்டு ஒப்பிட்டளவில் சிறப்பான ஆண்டாகவே அமைந்திருந்தது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டில் T20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரினையும் கைப்பற்றியிருந்தது.
இதேவேளை இரு அணிகளும் விளையாடிய T20 போட்டிகளை நோக்கும் போது இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் ஆடியிருப்பதோடு, இந்திய அணி அதில் 17 வெற்றிகளையும் இலங்கை 8 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றன.
இதேநேரம் இந்திய மண்ணில் இதுவரை இரு அணிகளும் 14 T20 போட்டிகளில் ஆடியிருப்பதோடு அதில் இந்திய அணி 11 வெற்றிகளையும் இலங்கை அணி 2 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது. இந்த கடந்த காலத் தரவுகள் இந்திய மண்ணில் இலங்கை T20 போட்டிகளில் தடுமாறி இருந்ததனை காட்டுகின்றது.
ஆனால் அண்மைய தரவுகளை நோக்கும் சந்தர்ப்பத்தில் இறுதியாக இரு அணிகளும் ஆடிய 6 T20 போட்டிகளில் இலங்கை, இந்திய அணிகள் தலா 3 வெற்றிகள் வீதம் பதிவு செய்திருக்கின்றன. எனவே அண்மைய தரவுகள் இலங்கை, இந்திய அணிகள் இடையில் நாளை ஆரம்பமாகும் T20 தொடர் விறுவிறுப்புடன் அமையும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
அணி விபரங்கள்
இந்தியா
இந்திய அணியினைப் பொறுத்தவரை ஹார்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட குழாமாகவே களமிறங்குகின்றது. அணியின் சிரேஷ்ட வீரர்களான விராட் கோலி, ரோஹிட் சர்மாக ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்காக அதிகம் நம்பப்படும் துடுப்பாட்டவீரராக சூர்யகுமார் யாதவ் காணப்படுகின்றார்.
சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டில் T20I போட்டிகளில் இரண்டு சதங்கள் அடங்கலாக அதிக ஓட்டங்கள் (1164) பெற்ற வீரராக காணப்படுவதோடு, 46.5 என்கிற சிறந்த துடுப்பாட்ட சராசரியுடன் 187.4 என்கிற S/R இணையும் வெளிக்காட்டியிருக்கின்றார். இவை சூர்யகுமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அதிக எதிர்பார்ப்புக்குரிய வீரராக இருப்பதற்கு சான்று பகர்கின்றது.
>> 7 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லும் இங்கிலாந்து
இதேவேளை சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து இஷான் கிஷன், சுப்மான் கில், சஞ்சு சம்ஷான் மற்றும் ருத்துராஜ் கய்க்வாட் என மிகவும் பலமிக்க துடுப்பாட்ட வரிசையினை இந்தியா கொண்டிருக்கின்றது. அத்துடன் அணியினை மத்திய வரிசையில் பலப்படுத்த டீபக் ஹூடா, அணித்தலைவர் ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்களும் காணப்படுகின்றனர்.
>> முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாடவுள்ள வியாஸ்காந்த்!
இந்திய அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது ஒப்பிட்டளவில் சற்று அனுபவம் குறைந்ததாக காணப்படுகின்ற போதும் அணிக்காக அண்மைய போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்திய துரித வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மலிக், ஹர்சால் பட்டேல், சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.
எதிர்பார்ப்பு XI
இஷான் கிஷன் (தலைவர்), ருத்திராஜ் கய்க்வாட்/சுப்மான் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹார்திக் பாண்ட்யா, ஹர்ஷால் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மலிக், அர்ஷ்தீப் சிங்
இலங்கை குழாம்
இலங்கை அணியினைப் பொறுத்தவரை இலங்கை அணியானது முன்னர் குறிப்பிட்டது போன்று இந்தியாவில் T20I போட்டிகளில் சிறந்த தரவுகளை வெளிப்படுத்தவில்லை. அதாவது இலங்கை அணி இன்னும் T20 தொடர் ஒன்றினை இந்திய மண்ணில் வெற்றி பெறவில்லை. T20 தொடர் என்பதனை விட இதுவரை இலங்கை இந்திய மண்ணில் இதுவரை இருதரப்பு ஒன்றினைக் கூட கைப்பற்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே இலங்கை கிரிக்கெட் அணிக்கு வரலாற்றினை மாற்றுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பம் இந்திய அணியுடனான T20 போட்டிகளில் கிடைத்திருக்கின்றது. இலங்கை அணியின் வீரர்களைப் பொறுத்தவரை அணிக்கு அதிக நம்பிக்கை வழங்குகின்ற துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸ் காணப்படுகின்றார்.
குசல் மெண்டிஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்ததோடு, லங்கா பிரிமீயர் லீக் தொடரிலும் திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். மறுமுனையில் இந்திய அணியுடன் குசல் மெண்டிஸ் T20I போட்டிகளில் 41 என்கிற சிறந்த துடுப்பாட்ட சராசரியினையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
>> இலங்கை அணியுடன் இணையும் கிரிஸ் கிலார்க்-அயர்ன்ஸ்
குசல் மெண்டிஸ் உடன் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் துடுப்பாட்டவீரர்களாக பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக பானுக்க ராஜபக்ஷ, அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரும் காணப்பட அணிக்குள் இருக்கும் சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹஸரங்க ஆகியோரும் துடுப்பாடக் கூடிய வல்லமை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரும் இலங்கை குழாத்திற்குள் திரும்பியிருக்கின்ற போதும் அவர்கள் முதல் பதினொருவரில் உள்நுழைவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு வனிந்து ஹஸரங்க மூலம் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டில் இலங்கை அணிக்காக T20I போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருந்ததோடு, இந்திய தொடரில் தனக்கு சுழல்பந்துவீச்சில் துணையாக மகீஷ் தீக்ஷனவினையும் பெற்றிருக்கின்றார்.
>> ஐ.சி.சி. இன் சிறந்த வீரர் பரிந்துரையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்
இவர்களுடன் கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுசான் மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர்.
எதிர்பார்ப்பு XI
பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, ப்ரமோத் மதுசான்
நாணய சுழற்சி சாதகம்
மும்பை வாங்கடே மைதானம் பொதுவாக இலக்குகளை விரட்டி அடிப்பதற்கு சாதகமாக அமைந்திருப்பதன் காரணமாக நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணி களத்தடுப்பினை தெரிவு செய்யும் போது அவ்வணிக்கு போட்டியின் ஆதிக்கத்தை முழுமையாக எடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<