இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர்களுக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர்கொண்ட குழாத்தில் LPL தொடரில் பிரகாசித்திருந்த நுவான் துஷார, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருடன் ஜெப்ரி வெண்டர்சே, உபாதைக்கு முகங்கொடுத்திருந்த டில்ஷான் மதுசங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடருக்கான இந்தியா குழாம் அறிவிப்பு!
அதேநேரம் மோசமான பிரகாசிப்புகள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்ன மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக செயற்படவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், T20I அணியின் உப தலைவராக வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் பானுக ராஜபக்ஷ மற்றும் நுவான் துஷார ஆகியோர் T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளதுடன், நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளனர்.
அவிஷ்க பெர்னாண்டோ உபாதைக்கு பின்னர் அணிக்குள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளதுடன், சதீர சமரவிக்ரம கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய தொடரையடுத்து மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
இவர்களை தவிர்த்து வழமையாக அணியில் இடம்பெற்றுவரும் சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, அஷேன் பண்டார, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் ஜனவரி 3ம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2வது போட்டி 5ம் திகதியும் (பூனே), 3வது போட்டி 7ம் திகதியும் (ராஜ்கோட்) நடைபெறவுள்ளன. இதனைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் ஜனவரி 10ம் திகதி குவாஹடியில் ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி 12 மற்றும் 15ம் திகதிகளில் முறையே கொல்கத்தா மற்றும் திருவானந்தபுரத்தில் நடைபெறவுள்ளன.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ் (ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவர்), பானுக ராஜபக்ஷ (T20I போட்டிகளுக்கு மாத்திரம்), சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க (T20I போட்டிகளுக்கான உப தலைவர்), அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்), சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித, நுவனிந்து பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம்), துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான், லஹிரு குமார, நுவான் துஷார (T20I போட்டிகளுக்கு மாத்திரம்).
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<