இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு சவாலானதா?- கூறும் நவீட் நவாஸ்!

Sri Lanka tour of India 2023

533

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த வெற்றியிலக்கு தொடர்பில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி பலமான துடுப்பாட்ட வரிசையை 162 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை அணியால், வெற்றிலக்கை அடைந்திருக்க முடியும் என இவர் குறிப்பிட்டார்.

டுபாய் கெபிட்டல்ஸ் அணியுடன் இணையும் சாமிக்க கருணாரத்ன!

“இந்த ஆடுகளத்தில் 170 அல்லது 180 ஓட்டங்கள் சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்திருக்கும். பந்துவீச்சு ஆரம்பத்தில் அதிர்ச்சியை கொடுத்தாலும், மீண்டுவந்து 162 ஓட்டங்களுக்கு இந்திய அணியை கட்டுப்படுத்துவது மிகச்சிறந்த உழைப்பாகும்.

வெற்றியிலக்கை அடைந்திருக்க முடியும். துடுப்பாட்ட வரிசை இந்த ஓட்ட எண்ணிக்கை அடைவதற்கான பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.

அதேநேரம் முதல் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் என்பதை நவீட் நவாஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

“நாம் துடுப்பாட்டத்தில் சில தவறுகளை செய்திருந்தோம். குறிப்பாக முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களிடமிருந்து மேலும் பங்களிப்பு கிடைத்திருக்கவேண்டும்.

பின்வரிசை வீரர்கள் சிறந்த மீள்வருகையொன்றை கொடுத்து சிறந்த போட்டிக்கு அழைத்துச்சென்றனர். துரதிஷ்டவசமாக போட்டியை நிறைவுசெய்ய முடியவில்லை. எனவே இதுதொடர்பில் நாம் கலந்துரையாடி அடுத்துவரும் போட்டிகளை சிறப்பாக ஆடவேண்டும். இந்திய அணி எந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.  அதனால் சிறந்த பலமான கிரிக்கெட்டை ஆடுவதன் மூலம் மாத்திரமே போட்டியை வெற்றிக்கொள்ள முடியும்” என்றார்.

இதேவேளை போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களும் இருந்தன என இவர் குறிப்பிட்டார். “ஒவ்வொரு போட்டியிலும் நாம் நேர்மறையான விடயங்களை எடுத்துக்கொள்ள முடியும். தற்போது தங்களை அடையாளப்படுத்திவரும் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த அனுபவத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இவர்கள் ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள். துடுப்பாட்டத்தை பொருத்தவரையிலும் அடுத்த போட்டிகளுக்காக கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் இருந்தன” என குறிப்பிட்டார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை (05) பூனேயில் நடைபெறவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<