இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20i மற்றும் ஒருநாள் தொடர்கள் புதிதாக இந்தியாவில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என அணித் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது.
புத்தாண்டின் புதிய சவாலை சமாளிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?
இந்நிலையில், தொடருக்கு முன்னரான ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட தசுன் ஷானக, “இந்த ஒருநாள் மற்றும் T20i தொடர்கள் அடுத்த உலகக் கிண்ணத்துக்கு மிக முக்கியமாகும். காரணம் எம்முடைய பல வீரர்கள் இந்தியாவில் விளையாடியதில்லை. பல வீரர்களுக்கு இது முதல் தொடர். அதனால், ஆடுகளங்கள் தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும்” என்றார்.
LPL தொடர் இலங்கையின் முதற்தர லீக் தொடரில் ஒன்றாக இருந்தாலும், IPL மற்றும் பிக் பேஷ் தொடர்களை போன்ற தரத்தை கொண்டது அல்ல என தசுன் ஷானக குறிப்பிட்டார்.
“LPL தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். ஆனாலும் IPL மற்றும் பிக் பேஷ் லீக் போன்ற தரத்துக்கான அனுபவத்தை கொடுக்காது. LPL தொடரிலிருந்து குறைந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் சர்வதேச கிரிக்கெட் என்பது வித்தியாசமானது. LPL தொடரில் பிரகாசித்த சில வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களுக்கான அனுபவம் இந்த தொடரில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்”
இதேவேளை, இந்திய அணியில் புதிய வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவதென்பது இலகுவான விடயமல்ல என குறிப்பிட்ட தசுன் ஷானக, தங்களிடம் பலமான அணியொன்று உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
“இந்தியா எப்போதுமே சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக நாம் சிறந்த கிரிக்கெட்டை ஆடவேண்டும். இந்திய அணியை இந்தியாவில் வைத்து வீழ்த்துவது இலகுவான விடயமல்ல. எனினும், எம்மிடம் சிறந்த அணியொன்று உள்ளது.
T20i போட்டியில் அன்றைய தினத்தில் பிரகாசிக்கும் அணிக்கு வெற்றி உறுதியாகும். எந்த அணிகளாலும் வெற்றிபெற முடியும். எமக்கான நாளில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் சிறந்த தரத்துடனான கிரிக்கெட்டை ஆடவேண்டும். இந்திய அணியில் யார் விளையாடினாலும் அதுவொரு சிறந்த அணி. எனவே எம்முடைய பக்கம் கட்டுப்படுத்த முடிந்த விடயங்களை சரியாக செய்யவேண்டும்” என்றார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20i போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (03) இரவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<