முதல் ஒருநாள் போட்டிக்கான திட்டம் என்ன? கூறும் தசுன் ஷானக!

Sri Lanka tour of India 2023

569
1st ODI Dasun Shanaka pre-press

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக கருத்து வெளியிட்டுள்ளார்.

T20I போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டித்தொடருக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் ஷானக குறிப்பிட்டார். “இந்திய அணி எவ்வாறான அணியென்பதை நாம் அறிவோம். நாம் இதற்கு முதலில் விளையாடியதை விடவும், மேலும் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம். 

>> BPL தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்ற வியாஸ்காந்த்!

எமது ஒருநாள் போட்டிகளுக்கான பிரகாசிப்புகள் கடந்த இரண்டு வருடங்களில் சிறப்பாக அமைந்திருந்தன. எனவே இந்த தொடரில் சிறப்பாக ஆடி, நாட்டுக்கு பெருமை சேர்க்க எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

அதேநேரம், இந்த ஒருநாள் தொடரானது இலங்கை அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பது தொடர்பிலும் தசுன் ஷானக சுட்டிக்காட்டினார். “உலகக்கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், இலங்கையின் வீரர்கள் அனைவருக்கும் இதுவொரு மிக முக்கியமான தொடராகும். இதுவொரு நல்ல தொடராக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்”

இதேவேளை இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை அணியின் சமநிலை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலு தசுன் ஷானக தெளிவுப்படுத்தினார். “இலங்கையை ஒப்பிடும்போது எமது ஒருசில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுகின்றனர். இந்தியாவை பொருத்தவரை அடுத்தடுத்து தொடர்கள் நடைபெறுவதால் வீரர்களை மாற்றிக்கொள்ள முடிகின்றது. அதிகமான வீரர்கள் உள்ளனர். இலங்கையில் அப்படியில்லை.

சகலதுறை வீரராக நான் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் விளையாடுகின்றேன். அதனால், உடற்தகுதியை பெறுவதற்கு எனக்கு இடைவேளை கிடைக்கும். இலங்கையில் தற்போது இந்த விடயத்தினை முகாமைத்துவம் செய்து வருகின்றோம்” என்றார்.

மேலும் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வெற்றிக்கொள்வதற்கு, போட்டித்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் என தசுன் ஷானக தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் தென்னாபிரிக்காவை தவிர்த்து வேறு எந்த அணிகளும் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. நாம் சிறந்த போட்டியை கொடுத்தோம். மும்பையில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெறவும் வாய்ப்பிருந்தது.

அதேநேரம் அனுபவ வீரர்களுடன் இந்திய அணி பலமான அணியாக வருகின்றது. நாம் போட்டித்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே வெற்றிபெறமுடியும்”

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை (10) குவஹாடியில் ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<