சுற்றுலா இலங்கை கிரிக்கெட் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியில், இங்கிலாந்து லயன்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வெற்றியினை நெருங்கி வரும் இங்கிலாந்து லயன்ஸ் அணி
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி மோதல் ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஆடுகின்றது.
இந்தப் பயிற்சிப் போட்டி புதன்கிழமை (14) வோர்கேஸ்டரில் ஆரம்பமாகியது. இந்தப் பயிற்சி மோதலின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் (306) துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கிற்காக 122 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய இங்கிலாந்து லயன்ஸ் அணி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து பின்னர் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
நேற்று (17) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியினர் போட்டியின் வெற்றி இலக்கை 26.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
இங்கிலாந்து லயன்ஸின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் ரொப் யேட்ஸ் 57 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் நான்காம் நாளில் மிலான் ரத்நாயக்க மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<