சுற்றுலா இலங்கை கிரிக்கெட் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது.
>>பயிற்சிப் போட்டி துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை வீரர்கள்<<
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி மோதல் ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஆடுகின்றது.
இந்தப் பயிற்சிப் போட்டி புதன்கிழமை (14) வோர்கேஸ்டரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் (139) ஆட்டத்தினைத் தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கி 145 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் ஹம்சா ஷேய்க் 21 ஓட்டங்களுடனும், பர்ஹான் அஹ்மட் 03 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றனர்.
நேற்று (16) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுக்களை இழந்த போதிலும் ஹம்சா ஷேய்க், கேஸி அல்ட்ரிஜ் ஜோடி பொறுப்பாக ஆடினர். இதனால் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 104 ஓட்டங்கள் பகிரப்பட்டது.
இந்த இணைப்பாட்டத்தினை கசுன் ராஜித ஹம்சா ஷேய்க்கின் விக்கெட்டினைக் கைப்பற்றி முடிவுக்கு கொண்டு வந்தார். ஹம்சா ஷேய்க் ஆட்டமிழக்கும் போது 7 பெளண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் பெற்றார்.
இதனையடுத்து 89.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியானது 324 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கேஸி அல்ட்ரிஜ் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மறுமுனையில் இலங்கைப் பந்துவீச்சு சார்பாக பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
>>Sports Fiesta T10 தொடருக்கான அணிக்குழாம்கள் அறிவிப்பு<<
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்து அவர்கள் இலங்கையை விட 145 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தனர். எனினும் போட்டியில் மழை பெய்ததன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தோடு நிறைவுக்கு வந்தது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<