இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு!

Sri Lanka tour of England 2024

3

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 18 பேர்கொண்ட இங்கிலாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் முக்கிய உள்ளீடாக கடந்த 2022ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இறுதியாக விளையாடியிருந்த பெதும் நிஸ்ஸங்க மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். 

தொடர் வெற்றியை எதிர்பார்த்து ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை

பெதும் நிஸ்ஸங்க 2022ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற  பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த போதும், அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

எனினும் தற்போது ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திவரும் இவர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். 

பெதும் நிஸ்ஸங்கவுடன் துடுப்பாட்ட வீரர்களாக திமுத் கருணாரத்ன, நிசான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் தலைவர் தனன்ஜய டி சில்வாவுடன் கமிந்து மெண்டிஸ் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் சகலதுறை வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து ஆடுகளங்களை பொருத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் சாதகத்தை கொடுக்கும் என்ற நிலையில் வேகப்பந்துவீச்சாளர்கள் அறுவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோருடன் நிசல தாரக மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். 

சுழல் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை பிரபாத் ஜயசூரியவுடன், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெப்ரி வெண்டர்சே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த நிசான் பீரிஸ் மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் குழாத்தில் இடம்பெறவில்லை. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 21ம் திகதி முதல் செப்டம்பர்  10ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம் 

தனன்ஜய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசான் மதுஷ்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (உப தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, அசித பெர்னாண்டோகசுன் ராஜித, லஹிரு குமார, நிசல தாரக, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே, மிலான் ரத்நாயக்க 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<