சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
>>மூன்றாம் நாள் ஆதிக்கத்தினை முழுமையாக கைப்பற்றிய இலங்கை
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-1 என ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
அதேவேளை இந்த வெற்றி மூலம் சுமார் 10 வருடங்களின் பின்னர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி வெற்றியொன்றினையும் இலங்கை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் ஓவல் அரங்கில் வெள்ளிக்கிழமை (06) தொடக்கம் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸை (156) அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் தீர்மானிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணி 94 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணிக்கு வெற்றிக்கு 125 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க பெதும் நிஸ்ஸங்க 53 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இன்று (09) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி தொடக்கத்தில் குசல் மெண்டிஸின் விக்கெட்டினை அவர் 39 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தது.
>>கண்டி, கோல் அணிகளுக்கு இலகு வெற்றிகள்
எனினும் அதன் பின்னர் புதிய வீரராக களம் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இணைந்த பெதும் நிஸ்ஸங்க பொறுப்புடன் ஆடி சதம் விளாச இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 40.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களுடன் கடந்தது.
இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டம் சார்பாக பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 02ஆவது டெஸ்ட் சதத்தோடு 124 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் 02 சிக்ஸர்கள் அடங்கலாக 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார். அத்துடன் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 111 ஓட்டங்களைப் பகிர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றார்.
அத்துடன் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி இலக்கினை விரட்டியதன் மூலம் இலங்கை அணியானது இங்கிலாந்து மண்ணில் 04ஆவது இன்னிங்ஸில் அதிகூடிய வெற்றி இலக்கு (219) ஒன்றை விரட்டிய ஆசிய அணியாக புதிய வரலாறு படைத்தது.
இங்கிலாந்துப் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்ஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அதனால் பிரயோசனம் ஏற்பட்டிருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவு செய்யப்பட, தொடர் நாயகன் விருதினை ஜோ ரூட், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<