டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

Sri Lanka tour of England 2024

1

சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து 190 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.   

லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் கடந்த வியாழக்கிழமை (29) தொடக்கம் நடைபெற்று இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (31) நிறைவடைந்த போது இங்கிலாந்தினால் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கைக்கு 483 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டதோடு இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது 

இலங்கை சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது இருந்த திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இன்று (01) போட்டியின் நான்காம் நாளில் சவால் நிறைந்த 483 ஓட்டங்களை அடைய துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணியானது முதல் விக்கெட்டாக பிரபாத் ஜயசூரியவினை பறிகொடுத்தது. அவர் 04 ஓட்டங்களுடன் ஓய்வறை சென்றார் 

அதன் பின்னர் இலங்கைத் தரப்பிற்காக ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்னவுடன் மத்திய வரிசை வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா மற்றும் பின்வரிசை வீரரான மிலான் ரத்நாயக்க ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதிலும் இலங்கை அணி இறுதியில் 86.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது 

இலங்கைத் தரப்பின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய வீரர்களில் தினேஷ் சந்திமால் 58 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 55 ஓட்டங்களையும் எடுத்தனர். இவர்கள் தவிர தனன்ஞய டி சில்வா 50 ஓட்டங்களை பெற்றதோடு, மிலான் ரத்நாயக்க 43 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 36 ஓட்டங்களையும் எடுத்தனர் 

இங்கிலாந்துப் பந்துவீச்சில் கஸ் அட்கின்ஸன் 5 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர் 

>> பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் மிஸ்பா

போட்டியின் ஆட்டநாயகனாக இப்போட்டியில் சகலதுறைகளிலும் அசத்திய கஸ் அட்கின்ஸன் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியின் வெற்றியோடு இங்கிலாந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கைப்பற்றியிருக்கின்றது 

இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வெள்ளிக்கிழமை (06) ஓவல் அரங்கில் நடைபெறுகின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<