ரூட்டின் அசத்தல் சதத்தோடு இங்கிலாந்து முன்னிலை

1

சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து அணியானது ஜோ ரூட்டின் சதத்தோடு வலுப்பெற்றுள்ளது.

>>இரண்டு மாற்றங்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடுகின்றனர். அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா தொடரை தக்க வைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து அணிக்குழாத்தில் இரண்டு மாற்றங்களை (பெதும் நிஸ்ஸங்க, லஹிரு குமார) மேற்கொண்டதோடு களத்தடுப்பினையும்  தெரிவு செய்தார்.

தொடர்ந்து போட்டியில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் அதாவது போட்டியின் முதல் இடைவெளியில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் முதல் நாளின் மதிய போசணத்தினை இங்கிலாந்து 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தவாறு அடைந்தது.

இதன் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் ஜோ ரூட் இங்கிலாந்து தரப்பு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த போதிலும் பொறுப்புடன் ஆடி அணியினைப் பலப்படுத்தத் தொடங்கினார்.

முதலாம் நாளின் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 33ஆவது சதத்தினைப் பூர்த்தி செய்த ரூட் இங்கிலாந்தின் 7ஆவது விக்கெட்டாக ஆட்டமிழக்கும் போது 18 பெளண்டரிகள் அடங்கலாக 143 ஓட்டங்கள் பெற்றார்.

தொடர்ந்த ஆட்டத்தில் பின்வரிசை வீரராக வந்த கஸ் அட்கின்சன் தன்னுடைய கன்னி அரைச்சதத்தோடு இங்கிலாந்தை மேலும் பலப்படுத்த அவ்வணி முதல்நாள் ஆட்டநிறைவில் 88 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்படுகின்றது.

>>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் கஸ் அட்கின்ஸன் 74 ஓட்டங்கள் பெற்றிருக்க, மெதிவ் பொட்ஸ் 20 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.

இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ, மிலான் ரத்நாயக்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருக்கின்றனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<