பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமாகியுள்ள முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, தங்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறைவுசெய்த இலங்கை அணி 397 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதேநேரம், தங்களுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்துள்ள பங்களாதேஷ் அணி ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 76 ஓட்டங்களை பெற்று, சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தி வருகின்றது.
மெதிவ்ஸின் சதத்தோடு முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை
போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் சதமடித்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் 34 ஓட்டங்களை பெற்றிருந்த தினேஷ் சந்திமால் ஆகியோர் இன்றைய தினம் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் இலகுவாக ஓட்டங்களை இலங்கை அணி உயர்திக்கொண்டது. இதில் தினேஷ் சந்திமால் தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்ய மறுமுனையில் மெதிவ்ஸ் நிதானமாக ஓட்டங்களை குவித்தார்.
எனினும் துரதிஷ்டவசமாக 66 ஓட்டங்களை பெற்றிருந்த தினேஷ் சந்திமால் நயீம் ஹஸனின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வருகைத்தந்த நிரோஷன் டிக்வெல்ல 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனவே, மதியபோசன இடைவேளையின் போது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக அதிர்சிச்கொடுத்து அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். ரமேஷ் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடனும், லசித் எம்புல்தெனிய ஓட்டங்களின்றியும் சகீப் அல் ஹஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக 328 ஓட்டங்களுக்கு தங்களுடைய 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ் தனியாளாக ஓட்டங்களை பெற்றுவந்ததுடன், பின்வரிசை துடுப்பாட்ட வீரரான விஷ்வ பெர்னாண்டோ ஒரு பக்கம் நிதானமாக விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் ஆடினார். அஞ்செலோ மெதிவ்ஸ் 150 ஓட்டங்களை கடந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, இலங்கை அணி தேநீர் இடைவேளை வரை விக்கெடெ்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஆடியது. இதில், அஞ்செலோ மெதிவ்ஸ் 178 ஓட்டங்களுடன் களத்திலிருக்க, விஷ்வ பெர்னாண்டோ தலையில் பந்து தாக்கிய காரணத்தால், தேநீர் இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.
இதனையடுத்து களமிறங்கிய அசித பெர்னாண்டோவின் தற்காப்பு ஆட்டத்தின் உதவியுடன் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய இரண்டாவது இரட்டைச்சதத்தை நெருங்கினார். இதில், அசித பெர்னாண்டோ, நயீம் ஹஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, உபாதைக்கு பின்னர் விஷ்வ பெர்னாண்டோ மீண்டும் களமிறங்கினார்.
விஷ்வ பெர்னாண்டா பந்துகளை எதிர்கொண்டு மெதிவ்ஸிற்கு இரட்டைச்சதம் அடிப்பதற்கான வாய்ப்பினை வழங்கிய போதும், துரதிஷ்டவசமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 199 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நயீம் ஹஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இரட்டைச்சதத்தை தவறவிட்டார். இலங்கை டெஸ்ட் அணியை பொருத்தவரை, சனத் ஜயசூரியவுக்கு அடுத்தப்படியாக 199 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த இரண்டாவது இலங்கை வீரராக மெதிவ்ஸ் மாறியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் ஆடவுள்ள திமுத்!
மெதிவ்ஸின் இந்த துடுப்பாட்டம் மற்றும் விஷ்வ பெர்னாண்டோவின் (17*) பங்களிப்பின் உதவியுடன் இலங்கை அணி 397 ஓட்டங்களை குவித்ததுடன், பங்களாதேஷ் அணி சார்பில் நயீம் ஹஸன் 6 விக்கெட்டுகளையும், சகீப் அல் ஹஸன் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர். துடுப்பாட்டத்தில் மெதிவ்ஸ் மற்றும் சந்திமாலை அடுத்து, குசல் மெண்டிஸ் முதல் நாள் ஆட்டத்தில் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 76 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் மஹ்மதுல் ஹஸன் ஜோய் 31 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 321 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு மேலும் 321 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<