“துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் ஆடவேண்டும்” – குசல் பெரேரா

Sri Lanka tour of Bangladesh 2021

244
BCB

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும் என இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான  முதல் ஒருநாள் போட்டி நேற்று (23) நடைபெற்றது. இந்தப்போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் மோசமான பிரகாசிப்பின் காரணமாக இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வனிந்துவின் போராட்டம் வீண் – முதல் போட்டி பங்களாதேஷ் வசம்

குறித்த இந்தப்போட்டி நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற செவ்வியில், இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா அணியின் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தது 35 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும் என குறிப்பிட்டார். அதேநேரம், வனிந்து ஹ சரங்கவின் துடுப்பாட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

பங்களாதேஷ் சிறந்த அணி. அனுபவ வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு அனுபவம் இல்லாவிடினும், துடுப்பாட்டத்தில் அவர்களுக்கு அனுபவம் அதிகம். எவ்வாறாயினும், 258 என்ற ஓட்ட எண்ணிக்கை பெறக்கூடியது. எனவே எமது துடுப்பாட்ட வீரர்கள் குறித்த பொறுப்பினை ஏற்கவேண்டும்.

இலங்கையில் உள்ள மிகச்சிறந்த வீரர் வனிந்து ஹசரங்க. இவ்வாறான வெப்ப காலநிலையில், 10 ஓவர்கள் வீசியது மாத்திரமின்றி 74 ஓட்டங்களையும் குவித்தார். இதுவொரு மிகச்சிறந்த விடயம். முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தது, 35 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். இதுதான் நாம் செய்த தவறு என குசல் பெரேரா சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இளம் அணியுடன் விளையாடியதுடன், நேர்மறையான விடயங்கள் அணிக்கு கிடைதிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாம் போட்டியில் தோல்வியடைந்த அணி. இது நல்ல விடயம் அல்ல. எனினும், சில நேர்மறையான விடயங்கள் இருந்தன. பந்துவீச்சாளர்கள் சிறந்த இடங்களில் பந்துகளை பதித்தனர். களத்தடுப்பிலும், துடுப்பாட்டத்திலும் முன்னேற்றம் இருந்தது. 

குறிப்பாக, வனிந்து ஹசரங்க சிறப்பாக தன்னுடைய பணியை செய்திருந்தார். எமக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. எனவே, நாம் பலமாக மீண்டுவருவோம் என்றார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நிறைவுபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி நாளைய தினம் (25) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…