பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம், வீரர்களின் அனுபவமின்மை என இலங்கை அணித்தலைவர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டியில், இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
படுதோல்வியுடன் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை
அதுமாத்திரமின்றி, இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரையும் இழந்திருந்தது. குறித்த இந்த தோல்விக்கு அணியில் உள்ள அனுபவமின்மை காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
“தோல்வியடைந்த அணியென்ற ரீதீயில் மிகவும் ஏமாற்றமடைகிறேன். எமது அணியின் அனுபவ குறைப்பாடு தோல்வியை வழங்கியுள்ளது. இரண்டு போட்டிகளிலும் மத்தியவரிசை துடுப்பாட்டம் வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் இருந்து மீளுவது தொடர்பில் துடுப்பாட்ட வீரர்களுடன் தீவிரமாக கலந்துரையாடி வருகின்றோம்” என்றார்.
அதேநேரம், வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு, அச்சமின்றிய கிரிக்கெட்டை ஆடுவதுடன், தங்களுடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
“வீரர்கள் அவர்களுடைய பலத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய பலத்தின் மீது நம்பிக்கைக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதிலிருந்து அவர்களால் வெளியில் வர முடியாது. வீரர்கள் அச்சமின்றிய கிரிக்கெட்டை ஆடவேண்டும். இல்லையென்றால் இதிலிருந்து மீளமுடியாது”என்றார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…