அவுஸ்திரேலியாவில் இலங்கை அணியின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும்?

170

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இலங்கை அணி முழுமையாக தயார்படுத்தப்பட்டு வருகின்றது. 

T20I தொடருக்கு முன்னதாக நேற்று (25) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி ஒரு விக்கெட்டால் இறுதிப் பந்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது.

பயிற்சிப் போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு இடையில்…

பயிற்சிப் போட்டியில் லசித் மாலிங்க, குசல் பெரேரா, இசுரு உதான போன்ற வீரர்கள் விளையாடாத நிலையில், இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த து. குறிப்பாக, ஓசத பெர்னாண்டோவின் துடுப்பாட்டம், லக்ஷான் சந்தகன் மற்றும் கசுன் ராஜித உட்பட பந்துவீச்சாளர்கள் பிரகாசித்திருந்தமை அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இறுதியாக நடைபெற்ற T20I தொடரில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை 3-0 என வீழ்த்திய இலங்கை அணி, தற்போது அனுபவ வீரர்கள் சிலருடன் மேலும் பலமான அணியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. 

எனவே, இளம் வீரர்களின் உத்வேகம் மற்றும் அனுபவ வீரர்களின் வருகையுடன் அவுஸ்திரேலிய அணிக்கு கடுமையான சவாலை இலங்கை அணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரையில், தடைக்கு உள்ளாகியிருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இவர்களுடன் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இவ்வாறு முன்னணி வீரர்களின் மீள்வருகையுடன் பலமான குழாத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகக் கிண்ணத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி T20I போட்டிகளில் விளையாடாவிட்டாலும், அவர்களின் கடந்தகால முடிவுகள் அவர்களின் பலத்தை காட்டுகிறது. 

குறிப்பாக, தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பியிருந்த டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலகக் கிண்ணம் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாகவே பிரகாசித்திருந்தனர். எனவே, முழுமையான பலத்துடன் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு மிகச்சவாலான அணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு, இரண்டு அணிகளும் பலமாக உள்ள நிலையில், சொந்த மண்ணில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி, தங்களுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி இலங்கை அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கும். எனினும், அடிக்கடி முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளை பரிசாக வழங்கி வரும் இலங்கை அணியும் போட்டித் தன்மையுடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

அவுஸ்திரேலிய அணி பலமான அணியாக இருந்தாலும், ஒட்டுமொத்த T20I  போட்டிகளின் முடிவுகளின் படி இலங்கை அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 13 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இலங்கை அணி 8 வெற்றிகளையும், அவுஸ்திரேலிய அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இதில், 5 இருதரப்பு T20I தொடர்களில் இரண்டு அணிகளும் மோதியுள்ளதுடன், 4 தொடர்களின் வெற்றிகளை இலங்கை அணி கைவசம் வைத்துள்ளது. அதேநேரம், இறுதியாக T20I தொடருக்காக அவுஸ்திரேலியாவுக்கு 2017ம் ஆண்டு சென்றிருந்த இலங்கை அணி, தொடரை 2-1 என வெற்றிக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I…

எதிர்பார்ப்பு வீரர்கள்

லசித் மாலிங்க

இலங்கை அணியை பொருத்தவரை T20I போட்டிகளில் அதிகமாக பேசப்படுபவர் லசித் மாலிங்க. இளம் வீரர்களுடன் அணியை வழிநடத்தும் லசித் மாலிங்கவின் அனுபவம் அவுஸ்திரேலிய அணிக்கு சவாலான ஒன்று. அத்துடன், அவரது பந்துவீச்சும் ஆஸி. அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 T20I போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மாத்திரமே இவர் வீழ்த்தியிருந்தாலும், இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மாலிங்க பந்துவீசிய விதம், அவுஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளேன் மெக்ஸ்வேல்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I  போட்டிகளை பொருத்தவரை இலங்கை அணிக்கு அதிகம் சவால் கொடுப்பவர் அதிரடி துடுப்பாட்ட வீரரும், சுழல் பந்துவீச்சாளருமான கிளேன் மெக்ஸ்வேல். கடந்த 2016ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இவரது அாபர துடுப்பாட்டத்தால், அவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் 145 ஓட்டங்களை விளாசிய இவர், இரண்டாவது போட்டியில் 66 ஓட்டங்களை பெற்று, அணியின் வெற்றிக்கு உதவினார். அத்துடன், இலங்கை அணிக்கு எதிராக 4 T20I போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள இவர், 219 என்ற ஓட்ட சராசரியில்  219 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

“ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஓட்டங்களை குவிப்பேன்” – மெண்டிஸ் நம்பிக்கை

T20I போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் ஓட்டங்களை…

இதனால், இந்த தொடரில் இலங்கை அணிக்கு மிகவும் சவால் கொடுக்கக் கூடிய வீரராக இவர் அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20I தொடருக்கான அணிக்குழாம்கள்

இலங்கை குழாம்

லசித் மாலிங்க (அணித் தலைவர்), குசல் பெரேரா, தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், தசுன் ஷானக, செஹான் ஜயசூரிய, வனிது ஹசரங்க, நுவன் பிரதீப், பானுக ராஜபக்ஷ, கசுன் ராஜித, இசுரு உதான,

அவுஸ்திரேலிய குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), அஸ்டன் ஆகர், அலெக்ஸ் கெரி, பெட் கம்மின்ஸ், பென் மெக்டெர்மோட், கிளேன் மெக்ஸ்வேல், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டென்லேக், மிச்சல் ஸ்டார்க், அஸ்டன் டேர்னர், என்ரு டை, டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா

இலங்கை அணியுடன் அவுஸ்திரேலிய அணியை ஒப்பிட்டு பார்க்கும் போது, அவுஸ்திரேலிய அணி பலமான அணியாகவே உள்ளது. ஆனால், இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி T20I தரவரிசையில் முதலிடத்திலிருந்த பாகிஸ்தான் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. அதுமாத்திரமின்றி, இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்களும் இணைந்துள்ளதால் அணியும் வலுபெற்றுள்ளது. எனவே, இந்த T20I தொடரானது மிகவும் விறுவிறுப்பான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<