உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை விளையாடவுள்ள போட்டிகள் அறிவிப்பு!

ICC Men’s T20 World Cup 2021

3391

ஓமான் தொடர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர், என்பவற்றுக்கான இலங்கை குழாத்தில் மேலும் 4 வீரர்களை இணைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை குழாத்திலிருந்த சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க உபாதையடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் மினோத் பானுக இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுவதுடன் ரமேஷ் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, அஷேன் பண்டார மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் இலங்கை குழாத்துடன் பயணிக்கவுள்ளனர் என எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இரத்து

எவ்வாறாயினும், மினோத் பானுக நேரடியாக உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெறுவாரா? என்பது, முதல்நிலை விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவின் உடற்தகுதியில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், தற்போதைய நிலையில் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருக்கிறார்.

குசல் பெரேரா, T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக உடற்தகுதி பெறுவார் எனவும், அவர் அணியில் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமின்றி, அடுத்த மாதம் 10ம் திகதிவரை குழாத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ளது.

ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள அணிகள் மொத்தமாக, வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் என 30 பேரை அணியில் இணைத்துக்கொள்ள முடியும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த எண்ணிக்கை 23 ஆக இருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள அணிகள், மேலதிகமான வீரர்களை அணியில் அழைத்துச்செல்ல முடியும் என்றாலும், குறித்த வீரர்களுக்கான செலுவுகளை அந்தந்த கிரிக்கெட் சபைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்த வீரர்கள் அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியானது, ஓமான் தொடருக்காக எதிர்வரும் 3ம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளதுடன்,  ஓமான் அணிக்கு எதிரான இரண்டு T20 போட்டிகள் 7ம் மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், 12 மற்றும் 14ம் திகதிகளில் T20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் ஒரு பயிற்சிப்போட்டியில் இலங்கை அணியானது, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், மற்றுமொரு போட்டியில் பபுவா நியூகினியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி 12ம் திகதியும், பபுவா நியூவ் கினியா அணிக்கு எதிரான போட்டி 14ம் திகதியும் நடைபெறவுள்ளது.

ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றில், இலங்கை அணியானது இம்மாதம் 18ம் திகதி நமீபியா, 20ம் திகதி அயர்லாந்து மற்றும் 22ம் திகதி நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • எதிர் ஓமான் – ஒக்டோபர் 7
  • எதிர் ஓமான் – ஒக்டோபர் 9
  • எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 12
  • எதிர் பவுவா நியூவ் கினியா – ஒக்டோபர் 14

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<