இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்குரிய பயிற்சிப் போட்டிகள் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ளது.
>> இலங்கை 19 வயதின் கீழ் அணியில் சாருஜன் சண்முகநாதன்!
மொத்தமாக 10 அணிகள் ஆடவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகுகின்றது. இந்த தொடருக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
பயிற்சிப் போட்டிகள் நடாத்துவதற்காக இந்தியாவின் திருவானந்தபுரம், ஹைதராபாத் மற்றும் குவஹாட்டி ஆகிய நகரங்களில் காணப்படும் மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் பயிற்சிப் போட்டியில் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி இலங்கை அணி பங்களாதேஷினை எதிர்கொள்கின்றது. இந்தப் பயிற்சி ஆட்டம் குவஹாட்டியில் இடம்பெறும்.
மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் அடுத்த பயிற்சி ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணியுடன் குவஹாட்டி மைதானத்தில் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இடம்பெறுகின்றது.
இதேவேளை, தொடரினை நடாத்தும் இந்தியா பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் மோதவிருப்பதோடு, ஐந்து தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தமது பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் மோதுகின்றது.
அதேநேரம், ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக மொத்தமாக 10 பயிற்சிப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதோடு பயிற்சிப் போட்டிகளில் அணிகள் தங்களது அணிக் குழாத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பயிற்சிப் போட்டிகள் விபரம்
செப்டம்பர் 29
- பங்களாதேஷ் vs இலங்கை – குவஹாட்டி
- தென்னாபிரிக்கா vs ஆப்கானிஸ்தான் – திருவானந்தபுரம்
- நியூசிலாந்து vs பாகிஸ்தான் – ஹைதராபாத்
செப்டம்பர் 30
- இந்தியா vs இங்கிலாந்து – குவஹாட்டி
- அவுஸ்திரேலியா vs நெதர்லாந்து – திருவானந்தபுரம்
ஒக்டோபர் 02
- இங்கிலாந்து vs பங்களாதேஷ் – குவஹாட்டி
- நியூசிலாந்து vs தென்னாபிரிக்கா – திருவானந்தபுரம்
ஒக்டோபர் 03
- ஆப்கானிஸ்தான் vs இலங்கை – குவஹாட்டி
- இந்தியா vs நெதர்லாந்து – திருவானந்தபுரம்
- பாகிஸ்தான் vs அவுஸ்திரேலியா – ஹைதராபாத்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<