எதிர்வரும் மே மாதத்தில் ஸ்கொட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கெடுக்கவுள்ளது.
ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான தயார்படுத்தல் போட்டிகளாக இலங்கை அணி இப்பயிற்சிப் போட்டிகளில் பங்கெடுக்கின்றது. இவ்விரண்டு போட்டிகளும் மே மாதம் 21ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் பெக்கிங்ஹாம் கவுன்டி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார
இரு அணிகளும் இறுதியாக 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போது, ஹொபார்ட்டில் சந்தித்திருந்தன. அப்போட்டியில் இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இந்தப் பயிற்சிப் போட்டிகள் குறித்து கிரிக்கெட் ஸ்கொட்லாந்தினுடைய இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறான்டு பிறட்பேர்ன், “இலங்கை அணிக்கெதிராக விளையாடுவதற்கு இரண்டு வாய்ப்புக்கள் கிடைப்பதென்பது, எமது அணியைப் பொறுத்தவரையில் மிகவும் பெறுமதி வாய்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் “எங்களுடைய தேசிய அணியினுடைய பெறுதிகளை, வளர்ந்து வரும் கிரிக்கெட் நுட்பங்களிற்கேற்ப அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்காகக இத்தொடரினை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
குறித்த போட்டிகள் உத்தியோகபூர்வமான சர்வதேச போட்டிகளாக அமையாதபோதும் அதே தரத்தில் இருக்கும். நாங்கள் ஒரு முழுமையான அணியாகக் களமிறங்குவதே எமது அணிக்கு சிறந்த அனுபவமாக அமையும். அதேவேளை அது அணியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நாம் ஒரு கட்டமைக்கப்பட்டு வரும் அணி என்ற ரீதியில் பலமாகக் களமிறங்குவதே எமக்கு சாதகமாக அமையும்.
உலக கிரிக்கெட்டில் ஸ்கொட்லாந்து நாட்டவர்களின் பிரியம் எல்லையற்றது. அவ்வாறே பெக்கிங்ஹாமில் இடம்பெறும் இரண்டு போட்டிகளும் நிச்சயமாக மிகவும் சிறப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
தற்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டிகளுக்கு தகுதியானவர்கள் அல்ல : முரளிதரன்
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகளாக இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை அணி, ஜூன் 1ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் குழு Bஇல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.