இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதனால் இலங்கையின் கிரிக்கெட்டையும், சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, இந்த கௌரவமான நிகழ்வை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் என்றும், உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் சபைகளின் பிரதிநிதிகளை ஈர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனிடையே, அரசியல் தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை இலங்கை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>இலங்கை கிரிக்கெட் மீதான ICC இன் உறுப்புரிமை தடை நீக்கம்
எவ்வாறாயினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28ஆம் திகதி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனைத்து அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தற்போதைய அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 108 ஆகும். அதில் 12 நாடுகள் டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டுள்ள நாடுகளாகும். ஏனைய 96 நாடுகளும் அங்கத்துவ நாடுகளாக இடம்பிடித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<