2024ஆம் ஆண்டில் இடம்பெறும் 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை (இளையோர் உலகக் கிண்ணத் தொடரினை) நடாத்துவதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது
ஐசிசியின் புதிய தலைவராக கிரெக் பார்க்லே மீண்டும் நியமனம்!
2024 தொடக்கம் 2027 வரையிலான காலப்பகுதியில் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் பல்நாட்டு (Multiple Countries) கிரிக்கெட் தொடர்களை நடாத்தவிருக்கும் நாடுகள் குறித்த அறிவிப்பினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு அமையவே இலங்கை 2024ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் 2026ஆம் ஆண்டுக்கான ஆடவர் இளையோர் உலகக் கிண்ணத் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இடம்பெறவிருப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதேடு, 2025ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளின் T20 உலகக் கிண்ணத் தொடர் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும், 2027ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளின் T20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் நடைபெறவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
இதேவேளை 2027ஆம் ஆண்டுக்கான ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கு அதனை நடாத்துகின்ற முழு அங்கத்துவ நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகள் நேரடித் தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 14 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் ஏனைய 8 அணிகள் ஐ.சி.சி. இன் ஒருநாள் அணிகள் தரவரிசையின் அடிப்படையிலும், எஞ்சிய அணிகள் தகுதிகாண் போட்டிகள் மூலமும் தெரிவு செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.