ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

2078

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி, வரலாற்று வெற்றி ஒன்றினை பதிவு செய்திருக்கின்றது.

இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருப்பது இலங்கை அணி இப்போட்டி மூலம் காலி மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட அதிகூடிய ஓட்டங்களை (268) எட்டிய அணி என்னும் சாதனையை நிலைநாட்டியிருப்பதாகும்.

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…..

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமைந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் காலி சர்வதேச மைதானத்தில் அணியொன்று டெஸ்ட் போட்டி ஒன்றின் நான்காம் இன்னிங்ஸில் விரட்டிய அதிகூடிய வெற்றி இலக்காக வெறும் 99 ஓட்டங்களே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த வரலாற்று வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி, இந்த வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்காகவும் 60 புள்ளிகளை எடுத்திருக்கின்றது. இந்நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்காக சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றன. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கையின் திட்டம் பற்றி திமுத் விளக்கம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக….

அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் வெற்றி பற்றி குறிப்பிடும் போது, இந்த வெற்றிக்காக இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததோடு இலங்கை அணியின் வெற்றிக்கு சதம் ஒன்றுடன் உதவியிருந்த திமுத் கருணாரத்னவினையும் பாராட்டியிருந்தார். மேலும், இலங்கை அணி போட்டியின் ஐந்தாம் நாளில் வெற்றி பெற்றதற்காக சிறப்பு வாழ்த்துக்களையும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார். 

இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற, போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் தாண்டி 122 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வெற்றிக்காக பெறப்பட்ட இந்த 122 ஓட்டங்கள் திமுத் கருணாரத்னவின் 9ஆவது டெஸ்ட் சதமாகவும் அமைந்திருந்தது. 

திமுத் கருணாரத்ன, நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றிக்காக பங்களிப்புச் செய்த இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

கருணாரத்னவுடன் இப்போட்டியில் விளையாடியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸூம் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த வீரர்களை வாழ்த்தியிருந்தார். மெதிவ்ஸ் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் (50) ஒன்றினை பெற்றிருந்ததோடு, இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது இருந்து இலங்கை அணியின் வெற்றியை உறுதியாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மெதிவ்ஸ் போன்று இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம்  (53) பெற்றிருந்த மற்றுமொரு வீரரான குசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி பற்றி கருத்துக்களை பகிர்ந்திருந்த போது, இந்த வெற்றி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் எனத் தெரிவித்தார். அத்தோடு மெண்டிஸ், திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டத்தையும் பாராட்டினார். 

இந்நிலையில், இலங்கை அணியின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் குமார் சங்கக்கார கடினமான நிலைகள் இருக்கும் காலி மண்ணில் நான்காம் இன்னிங்ஸில் வெற்றி இலக்கினை எட்டியது சிறந்த விடயம் எனத் தெரிவித்திருந்ததோடு, இலங்கை அணி வீரர்கள் அனைவரையும்  வாழ்த்தியிருந்தார்.    

இலங்கை அணிக்காக இதுவரையில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வேகப்பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத், திமுத் கருணாரத்ன உட்பட நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணமான அனைத்து இலங்கை வீரர்களையும் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்ட சதம், நான்காவது இன்னிங்ஸில் பெறப்பட்டதால் அது மிகச் சிறந்த ஒன்று எனத் தெரிவித்திருந்தார். 

மறுமுனையில் இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி வர்ணனையாளரான ரொஷான் அபேசிங்க, இலங்கை அணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைய குறித்த வெற்றி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் பெறப்பட்டதை காரணமாக சுட்டிக்காட்டியிருந்தார். 

இன்னும் இலங்கை அணியின் வீரர்களான திசர பெரேரா, உபுல் தரங்க ஆகியோரும் இலங்கை அணிக்கு கிடைத்த இந்த வரலாற்று வெற்றியினை பாராட்டியிருந்தனர்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<