மே.தீவுகள் தொடருக்கான 22 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

West Indies tour of Sri Lanka 2021

3109

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 22 பேர்கொண்ட இலங்கை குழாத்தில் இளம் வீரர்கள் பலர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக குழாத்தை இதுவரை அறிவிக்காத போதும், 22 பேர்கொண்ட குழாம் தொடர்பான விபரங்கள் எமது இணையத்தளத்துக்கு கிடைத்துள்ளது.

>>இளையோர் உலகக் கிண்ணம் 2022: சவாலான குழுவில் இலங்கை

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில், T20 உலகக்கிண்ணத்தில் பிரகாசித்திருந்த சரித் அசலங்கவுடன், சாமிக்க குணசேகர, சுமிந்த லக்ஷான் மற்றும் விக்கெட் காப்பாளர் கமில் மிஷார ஆகிய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன், கடந்தகாலமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேநேரம், தனிப்பட்ட காரணங்களுக்காக லஹிரு திரிமான்ன தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஒருவர் திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இறுதியாக இலங்கை அணி விளையாடிய பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில், காயம் காரணமாக வெளியேறியிருந்த சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இவர்களுடன், இலங்கை டெஸ்ட் அணியின் துடுப்பாட்ட வீரர்காளக தினேஷ் சந்திமால், மினோத் பானுக, தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, பெதும் நிஸ்ஸங்க மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர்களாக அனுபவ வீரர் சுரங்க லக்மாலுடன், அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரம், சுழல் பந்துவீச்சாளர்களாக இளம் வீரர்களான பிரவீன் ஜயவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷான் சந்தகன் மற்றும் சுமிந்த லக்ஷான் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஞாயிற்றுக்கிழமை (21) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, பிரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக, பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷான், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தன், சாமிக்க குணசேகர, லசித் எம்புல்தெனிய, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<