பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

3397
Sri Lanka T20I squad

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணியின் தலைவர் உபுல் தரங்க உட்பட பல மூத்த வீரர்களும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது T20 போட்டிக்கு பாகிஸ்தான் செல்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில், சகலதுறை வீரர் திசர பெரேரா இலங்கை அணி தலைவராக செயற்படவுள்ளார்.

பெரேரா உலக பதினொருவர் அணியுடன் T20 தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தான் பயணித்திருந்தார். இந்த தொடர் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுடனான முதல் இரு போட்டிகளும் அபுதாபியில் ஒக்டோபர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதோடு கடைசிப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி லாஹூருக்கு பயணிக்கவுள்ளது.

இந்த தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் முதல் இரு போட்டிகளுக்கும் மற்றைய போட்டிக்கும் வெவ்வேறு இலங்கை குழாமை அறிவிக்கும்படி அணியின் மூத்த வீரர்கள் கோரியபோதும் ஒட்டுமொத்த தொடரருக்கும் ஒரே குழாமை தேர்வு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்தது.

இதன்படி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் இலங்கை ஒருநாள் குழாமின் ஒன்பது வீரர்கள் T20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். திசர பெரேரா, இளம் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம, வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களான ஜெப்ரி வன்டர்செய், சீகுகே பிரசன்ன தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இலங்கை A அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தசுன் சானக்க உட்பட ஏனைய வீரர்கள் அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளனர்.

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியை, 7 விக்கெட்டுகளால் இலங்கை…

தில்ஷான் முனவீர, அஷான் பிரியஞ்சன், இசுரு உதான மற்றும் சதுரங்க டி சில்வா ஆகிய T20 போட்டிகளின் சிறப்பு வீரர்களுடன், நடத்தை விதி மீறல் காரணமாக இடைக்கால தடைக்கு முகங்கொடுத்த இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க இப்போட்டித் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பவுள்ளார்.

இலங்கை அணிக்காக கடைசியாக 2009ஆம் ஆண்டில் விளையாடிய 31 வயதுடைய துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்தவும் இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரரான விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக்க முதல் முறை தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

லாஹூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பயணித்த பஸ் வண்டி மீது இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது தடைப்பட்டதோடு, பாகிஸ்தான் அணி தனது சர்வதேச போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே விளையாடி வருகிறது.

இலங்கை T20 குழாம்: திசர பெரேரா (தலைவர்), தில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, அஷான் பிரியஞ்சன், மஹேல உடவத்த, தசுன் ஷானக்க, சச்சித் பதிரன, சீகுகே பிரசன்ன, ஜெப்ரி வன்டர்செய், சதுரங்க டி சில்வா, விகும் சன்ஜய, லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ, இசுரு உதான