சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது.
>>சமரியின் சாதனை சதத்துடன் மலேசியாவை வீழ்த்தியது இலங்கை<<
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் ஆடுகின்றது. இதில் முதலாவதாக இரு அணிகளும் பங்கெடுக்கும் T20 தொடர் இந்த சனிக்கிழமை (27) கண்டி பல்லேகலேயில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
முக்கிய மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை T20I அணியின் தலைவராக சரித் அசலங்க நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, இறுதியாக T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
>>நான்காவது முறையாக LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்<<
அதேநேரம் இந்த வாரம் நிறைவடைந்த LPL T20 தொடரில் திறமையான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அனுபவ துடுப்பாட்டவீரரான தினேஷ் சந்திமால் இலங்கை T20I அணியில் சுமார் 2 வருடங்களின் பின்னர் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். LPL T20 தொடரில் கண்டி பல்கோன்ஸ் அணிக்காக ஆடிய தினேஷ் சந்திமால் 168.82 என்கிற SR உடன் இம்முறை 287 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இலங்கை வீரராக இம்முறை LPL T20 தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவும், இந்திய தொடரில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இன்னும் LPL தொடரில் பிரகாசித்த குசல் ஜனித் பெரேராவும் இலங்கை T20 அணியில் குறுகிய இடைவெளியொன்றின் பின்னர் இணைந்திருக்கின்றார்.
இன்னும் LPL தொடரில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடி திறமையினை வெளிப்படுத்திய இளம் சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்கவிற்கும், இலங்கை T20 அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
அதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சினை பலப்படுத்தும் முக்கிய வீரர்களாக முன்னாள் தலைவர் வனிந்து ஹஸரங்கவுடன், சுழல்வீரரான மகீஷ் தீக்ஷன காணப்படுவதோடு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக துஷ்மன்த சமீரவுடன், மதீஷ பதிரன மற்றும் நுவான் துஷார ஆகியோர் காணப்படுகின்றனர். இதேவேளை டில்சான் மதுசங்கவிற்கு இந்திய T20I தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதோடு, அவருக்குப் பதிலாக கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக LPL தொடரில் பிரகாசித்த பினுர பெர்னாண்டோ இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை T20I அணி
சரித் அசலன்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஸன, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பதிரன, நுவான் துஷார, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<