இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20தொடரின் முதல் போட்டி டிரம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே டிசம்பர் 22, 24 ஆம் திகதிகளில் நடைபெறும்.
சகலதுறை வீரர் திசர பெரேரா தலைமையிலான இலங்கை குழாமில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றமாக அனுபவ வேகப்பந்து விச்சளர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாலிங்க கடைசியாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரே ஒரு T20 போட்டியில் இலங்கை அணிக்காக ஆடினார். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 சர்வதேச போட்டிகளுக்கு அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
எனினும் தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தை ஒட்டி மாலிங்க அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் சம்பியன்ஸ்களான ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் ஆடினார்.
தற்போதைய ஒருநாள் குழாமில் இடம்பிடித்திருக்கும் லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால் T20 போட்டிகளுக்கு இணைக்கப்படவில்லை. அவர்களுக்கு பதில் தசுன் ஷானக்க, இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இடம்பெற்றுள்ளனர்.
T20 போட்டிகளின் சிறப்பு வீரர்களான இசுரு உதான, சீகுகே பிரசன்ன மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோரும் தேர்வாளர்களின் பார்வைக்கு வரவில்லை.
முதல் T20 போட்டி கட்டக்கில் நடைபெறவிருப்பதோடு தொடர்ந்து அடுத்த இரண்டு ஆட்டங்களும் முறையே இன்தோர் மற்றும் மும்பையில் நடைபெறும்.
இலங்கை T20 குழாம்
திரச பெரேரா (தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, தசுன் ஷானக்க, சதுரங்க டி சில்வா, சச்சித் பதிரன, அகில தனஞ்சய, துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ.
- முதலாவது T20 – டிசம்பர் 20 – கட்டக்
- 2ஆவது T20 – டிசம்பர் 22 – இன்தோர்
- 3ஆவது T20 – டிசம்பர் 24 – மும்பை