இலங்கை ரக்பி சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சூப்பர் 7s ரக்பி போட்டிகளில், கண்டியில் நடைபெற்ற முதலாம் கட்ட போட்டிகளில், கழக மட்டத்தில் மொபிடெல் ஈகல்ஸ் அணியினர் கிண்ணத்தை சுவீகரித்ததோடு, பாடசாலை மட்டத்தில் சயன்ஸ் கல்லூரியானது கிண்ணத்தைக் கைப்பற்றியது. சிறப்பு அதிதியாக தொலைதொடர்பாடல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்டியில் நடைபெற்ற இப்போட்டித் தொடர், இன்று கோலாகலமாக முடிவுற்றது. இன்றைய தினத்தில், கழக மற்றும் பாடசாலை மட்டத்திலான நொக் அவுட் போட்டிகள் நடைபெற்றதோடு, பெண்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது.
கழக மட்ட போட்டிகள்
முதலாம் நாளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்ற சொப்ட் லொஜிக் வொரியர்ஸ் அணியினர், முதலாம் நாள் A குழுவில் முதல் இடம் பிடித்த காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணியினரை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தனர். இதன் மூலம் முதலாம் நாளில் சிறப்பாக செயற்பட்ட பொழுதும் காலிறுதியில் தோல்வியுற்றதால் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணியினர் போவ்ள் (Bowl) அரையிறுதிக்கே தகுதி பெற்றனர்.
தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது போன்றே வாக்கர்ஸ் வைப்பர்ஸ் அணியினர், KBSL ட்ரகன்ஸ் அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற, எக்சஸ் கிங்ஸ் அணியினர் எடிசலாட் பந்தர்ஸ் அணியை வென்று கப் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பலம் மிக்க மொபிடெல் ஈகல்ஸ் அணியினர் முதலாம் நாளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற பொழுதும், முதல் நாளில் இறுதி இடத்தை பிடித்த EZY வூல்வ்ஸ் அணியுடனான நெருங்கிய போட்டியில், 7-5 என கடின உழைப்பின் பின்னரே வெற்றிகொண்டு கப் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
போவ்ள் அரையிறுதிப் போட்டியும் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. KBSL ட்ரகன்ஸ் அணியிடம் தோல்வியுற்ற காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் ஷீல்ட் கிண்ணத்திற்கு தள்ளப்பட்டது துரதிஷ்டம் ஆகும். EZY வூல்வ்ஸ் அணியினர் மரிஜாவின் எடிசலாட் பந்தர்ஸ் அணியை தோற்கடித்து போவ்ள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் இரண்டாம் நாளை தமக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு கப் அரையிறுதிப் போட்டியிலும் வாக்கர்ஸ் வைப்பர்ஸ் அணியை வென்று கப் இறுதிக்குத் தகுதி பெற்று தமது திறமையை நிரூபித்தனர். சென்ற வருட சம்பியனான மொபிடெல் ஈகல்ஸ் அணியினர் மற்றுமொரு நெருங்கிய போட்டியில் எக்சஸ் கிங்ஸ் அணியை 7-5 என வென்று இம்முறையும் இறுதிப் போட்டியில் தமது இடத்தை தக்கவைத்தனர். எக்சஸ் கிங்ஸ் மற்றும் வாக்கர்ஸ் வைப்பர்ஸ் அணியினர் பிளேட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மரிஜாவின் எடிசலாட் பந்தர்ஸ் அணியினர், காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணியை வென்று ஷீல்ட் கிண்ணத்தைக் கைப்பற்றினர். EZY வூல்வ்ஸ் அணியானது 19-14 என நெருங்கிய போட்டியின் பின்னர் KBSL ட்ரகன்ஸ் அணியை வென்று போவ்ள் கிண்ணத்தைக் கைப்பற்றியது. பிளேட் இறுதிப் போட்டியில் எக்சஸ் கிங்ஸ் அணியானது இலகுவாக 24 புள்ளிகள் வித்தியாசத்தில் வார்க்கர்ஸ் வைப்பர்ஸ் அணியை வென்று பிளேட் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டியானது, பிரதம அதிதியான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு இரு அணிகளையும் அறிமுகப்படுத்திய பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ரக்பி அணியின் தலைவரான ரொஷான் வீரரத்னவின் தலைமையில் விளையாடிய மொபிடெல் ஈகல்ஸ் அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதலாம் பாதியானது 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் அணிக்கு சார்பாகவே காணப்பட்டது. எனினும் இரண்டாம் பாதியில் தனது சிறப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய மொபிடெல் அணியானது ட்ரை மேல் ட்ரை வைத்தது. தனது வெளிநாட்டு வீரர்களின் உதவியை பெற்றுக்கொண்ட மொபிடெல் அணியானது 19-05 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்றது. இதன் மூலம் முதல் கட்ட போட்டிகளில் மொபிடெல் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது .
பாடசாலை மட்ட போட்டிகள்
முதலாம் நாளில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் நாள் அரையிறுதிப் போட்டிகளுடன் ஆரம்பமாகியது. முதலாம் நாளில் கிங்ஸ்வூட் அணியிடம் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்த புனித ஜோசப் கல்லூரியானது போவ்ள் கிண்ண அரையிறுதியில் தர்மராஜ கல்லூரியை 19-12 என வென்று போவ்ள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ரக்பி போட்டிகளின் முடிசூடா மன்னர்களாகிய இசிபதன கல்லூரியின் தொடர் தோல்விகள் இன்றும் தொடர்ந்தன. போவ்ள் அரையிறுதிப் போட்டியில் அந்தோனியார் கல்லூரியிடமும் இசிபதன கல்லூரி தோல்வியுற்றதன் மூலம் அந்தோனியார் கல்லூரி போவ்ள் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
கப் அரையிறுதிப் போட்டிகளில் சயன்ஸ் கல்லூரியானது கிங்ஸ்வூட் கல்லூரியை 33-07 என இலகுவாக வென்று கப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது கப் அரையிறுதிப் போட்டியில் புனித பேதுரு கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி ஆகிய இரண்டு பலம் மிக்க அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பான போட்டியின் பின்னர் இறுதி நேரத்தில் திரித்துவக் கல்லூரி 22-19 என வெற்றிபெற்றது.
ஷீல்ட் கிண்ண இறுதிப் போட்டியில் மீண்டும் ஓரு முறை இசிபதன கல்லூரியானது தர்மராஜா கல்லூரியிடம் தோல்வியுற்றது. இதன் மூலம் இத்தொடரில் எந்த ஒரு போட்டியிலும் வெற்றிபெறாது இசிபதன கல்லூரி வீடு திரும்பியமை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற போவ்ள் இறுதிப் போட்டியில் மீண்டும் ஒரு முறை புனித ஜோசப் கல்லூரி ஏமாற்றம் அளித்தது. அந்தோனியார் கல்லூரியானது 22-14 என வென்று போவ்ள் கிண்ணத்தை சுவீகரித்து.
கிங்ஸ்வூட் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான பிளேட் கிண்ண இறுதி போட்டியானது விறுவிறுப்பாக அமைந்தது. போட்டியின் ஆரம்பத்தில் பேதுரு கல்லூரியனது ஆதிக்கம் செலுத்திய பொழுதும், கிங்ஸ்வூட் கல்லூரியானது முயற்சியை கைவிடவில்லை. 12-19 என பேதுரு கல்லூரிக்கு புள்ளிகள் சாதகமாகக் காணப்பட்ட பொழுதும் இறுதி நிமிடத்தில் ட்ரை வைத்து கொன்வெர்சனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கிங்ஸ்வூட் கல்லூரியானது போட்டியை சமநிலையில் முடித்தது. இதன் மூலம் பிளேட் கிண்ணத்தை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் திரித்துவக் கல்லூரி மற்றும் சயன்ஸ் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே சயன்ஸ் கல்லூரியானது ஆதிக்கம் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. சயன்ஸ் கல்லூரியின் நட்சத்திர வீரர், ஹேஷான் மதுமாதவ தனது வேகத்தின் மூலம் தனது அணியை வெற்றியின் பக்கம் அழைத்து சென்றார் எனலாம். முதல் ட்ரை உட்பட ட்ரைகளை தனது தனி முயற்சியில், தனது வேகத்தை பயன்படுத்தி வைத்த மதுமாதவ திரித்துவக் கல்லூரிக்கு பாரிய அழுத்தமாக அமைந்தார். திரித்துவக் கல்லூரியானது ட்ரை வைக்க முயற்சி செய்த பொழுதும், வாய்ப்புகளை நழுவவிட்டது. இறுதியில் 19-05 என சயன்ஸ் கல்லூரி வெற்றிபெற்று கப் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
பெண்கள் பிரிவு
இன்றைய தினத்தில் முதல் இரண்டு போட்டிகளிலும் பெண்கள் அணியினர் மோதிக்கொண்டனர். இராணுவ விளையாட்டுக் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், CR & FC கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகம் என்பவற்றின் பெண்கள் அணியினர் லீக் முறையில் தலா 3 போட்டிகள் விளையாடினர். முதல் போட்டியில் 53-00 என CR & FC அணியை வென்று தனது பலத்தை இராணுவ அணி நிரூபித்தது. கடற்படை அணியும் 36-05 என விமானப்படை அணியை வென்றது.
இரண்டாவது போட்டியிலும் CR & FC அணியினால் கடற்படை அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. கடற்படை அணி 55-00 என வெற்றிபெற மறுமுனையில் இராணுவ அணி இலகுவாக விமானப்படையை வென்றது. இந்நிலையில் பெண்களுக்கான போட்டிகளில் முதல் இடத்தை முடிவு செய்யும் தீர்மானம் மிக்க போட்டியில் கடற்படை அணி மற்றும் இராணுவ அணி மோதிக்கொண்டன. இராணுவ அணி 24-00 என வெற்றிபெற்று முதலாம் இடத்தை உறுதி செய்துகொண்டது. கடற்படை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு, CR & FC அணியை தோற்கடித்து விமானப்படை அணி 3ஆம் இடத்தைப் பிடித்தது.
இவ் வாரம் கண்டியில் நடைபெற்ற போட்டிகள் முதல் கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டியே தொடரின் சம்பியனை தெரிவு செய்யும். இவ்வார முதல் கட்ட முடிவுக்கமைய அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் விபரம் பின்வருமாறு.
அணி | புள்ளிகள் |
கல்கிஸ்ஸ சயன்ஸ் கல்லூரி
|
8 |
திரித்துவக் கல்லூரி | 7 |
புனித பேதுரு கல்லூரி | 6 |
கிங்ஸ்வூட் கல்லூரி | 6 |
புனித அந்தோனியார் கல்லூரி | 5 |
புனித ஜோசப் கல்லூரி | 4 |
தர்மராஜ கல்லூரி
|
3 |
இசிபதன கல்லூரி | 2 |
அணி | புள்ளிகள் |
மொபிடெல் ஈகல்ஸ்
|
8 |
சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் | 7 |
எக்சஸ் கிங்ஸ் | 6 |
வாக்கர்ஸ் வைப்பர்ஸ் | 5 |
EZY வூல்வ்ஸ் | 4 |
KBSL ட்ரகன்ஸ் | 3 |
எடிசலாட் பந்தர்ஸ் | 2 |
காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் | 1 |