இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டமான இன்று, இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், கடுமையான விரல் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களின் உதவியை எதிர்பார்க்கும் தினேஷ் சந்திமால்
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெக் டொரன், டில்ருவான் பெரரா வீசிய பந்தினை வேகமாக அடிக்க, சோர்ட் லெக் (Short Leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட குசல் மெண்டிஸ், பந்தினை தலைக்கு படாமல் தடுக்கும் வகையில் கையை வைத்து மறைத்துக்கொண்டார். இதன்போது, பந்து நேரடியாக அவரின் கைவிரலை தாக்க, மெண்டிஸ் கடுமையான வலியால் அவதிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு குசல் மெண்டிஸ் வெளியேற முற்பட, வைத்தியர்கள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, மிகவும் அதிகமான வேதனையை உணர்ந்த மெண்டிஸ் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். எனினும், இதுவரையில் மெண்டிஸின் உபாதை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், நாளை காலை மெண்டிஸிற்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 24 மணிநேரங்களுக்கு பின்னரே அவரது உபாதை குறித்த முழு விபரம் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குறிப்பிட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க, “மெண்டிஸின் விரலில், தற்போது சிறிதாக வலி இருப்பதுடன், அவரால் துடுப்பாட்ட மட்டையை சரியாக பிடிக்க முடியாத நிலை உள்ளது. இன்னும் 24 மணிநேரத்திற்கு பின்னரே உபாதை தொடர்பான தகல்களை வெளிப்படுத்த முடியும். ஆரம்பத்தில் அவர் அதிகமான வலியை உணர்ந்தாலும், தற்போது வலி குறைந்துள்ளது” என்றார்.
Read: பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்ற இலங்கை
இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக அவுஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், குசல் மெண்டிஸின் உபாதை இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இலங்கை அணி சார்பில் டெஸ்ட் போட்டிகளில் மெதிவ்ஸை அடுத்து, மெண்டிஸ் சிறந்த முறையில் ஓட்டங்களை குவித்து வருகின்றார். இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ஓட்ங்களையும், பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 67 ஓட்டங்களையும் இவர் பெற்றுக்கொடுத்திருந்தார்.
குசல் மெண்டிஸ் மைதானத்திலிருந்து வெளியேறிய பின்னர், குறித்த சோர்ட் லெக் பகுதியில், ரொஷேன் சில்வா களத்தடுப்பில் ஈடுபட்ட நிலையில், அவர் களத்தடுப்பில் ஈடுபட்ட 3 பந்துகளில் 2 பந்துகள் வேகமாக அவரின் கைகளை தாக்கியது. இதனால் அவரும் கடுமையான வலியை உணர்ந்ததுடன், குறித்த சோர்ட் லெக் பகுதியின் களத்தடுப்பை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் நீக்கியிருந்தார்.
இதேவேளை, ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னர் குசல் மெண்டிஸின் உபாதை பாரதூரமாக இருக்கும் பட்சத்தில், அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகும் என்பதுடன், இலங்கை அணிக்கு மெண்டிஸின் இழப்பு பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க