இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை

3918

வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் உபாதை ஒன்றினை எதிர்கொண்டுள்ளார். இதனால், அவர் இலங்கை அணி பங்களாதேஷிற்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) விளையாடும் உலகக் கிண்ண போட்டியில் பங்கெடுக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (9) இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள பிரிஸ்டல் மைதானத்தில் வலைப் பயிற்சிகளில் நுவன் பிரதீப் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் வெற்றி பெற்றோம் – கேன் வில்லியம்சன்

ஆப்கானிஸ்தான் அணியில் உலகின் முன்னணி வீரர்கள்…..

இந்த நிலையில் குசல் பெரேரா வலிமையாக அடித்த பந்து நுவன் பிரதீப்பினை நோக்கி வந்தது. தன்னை நோக்கி வந்த பந்தினை பிரதீப் தனது கைகளினால் தடுக்க முற்பட்ட நிலையிலேயே கையில் பந்து தாக்கி விரல் உபாதை ஏற்பட்டிருக்கின்றது.

பந்து தாக்கிய மறுகணத்திலேயே நுவன் பிரதீப் வைத்திய உதவிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பிரதீப் தொடர்பான வைத்திய அறிக்கைகள் வெளிவந்த பின்னர் இலங்கை அணியின் முகாமையாளரான அசந்த டி மெல் ThePapare.com இடம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“அதிர்ஷ்டவசமாக அவரின் (பிரதீப்பின்) விரலில் உடைவு எதுவும் ஏற்படவில்லை. விலகலே ஏற்பட்டிருக்கின்றது. அவர் நிச்சயமாக பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் (விளையாடப் போவது) இல்லை. வைத்தியர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் இன்னும் ஒரு வாரத்தில் (கிரிக்கெட்) போட்டிகளில் விளையாட முடியும்.”

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நுவன் பிரதீப் வெறும் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்து இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியினை பதிவு செய்ய உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, திறமையாக செயற்பட்ட நுவன் பிரதீப் இப்போது ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக அணியில் இல்லாமல் போயிருப்பது பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணிக்கு பாரிய இழப்பாகும்.

எனினும், நுவன் பிரதீப் தனது உபாதையில் இருந்து குணமடைந்த பின்னர் இங்கிலாந்து அணியுடன் லீட்ஸ் நகரில் இலங்கை எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் உலகக் கிண்ணப் லீக் போட்டியில் பங்கெடுப்பார் என நம்பப்படுகிறது.

இதேநேரம் நுவன் பிரதீப் இல்லாமல் போகும் போட்டிகளில் இலங்கை அணி சுழல்பந்து சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிசுக்கு வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<