இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

4175

பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சி தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை

இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மதுஷன் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்டத்திலும் சிறப்பிக்க கூடிய ஒருவராக உள்ளார். இதேநேரம், வியாஸ்காந்த் வலதுகை சுழல் பந்துவீச்சாளராக திறமையை வெளிப்படுத்த கூடியவராக இருக்கின்றார். இந்த இரண்டு வீரர்களும் இந்த ஆண்டுக்கான வடக்கின் சமர் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தமது பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவியிருந்தனர்.

அதன் பின்னர் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையில் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் தொடரிலும் வட மாகாணம் சார்பில் பிரகாசித்திருந்தனர். இதனால், இருவரும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில்  வியாஸ்காந்த் இந்திய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் தொடரின் போட்டியொன்றில் இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படியானதொரு நிலையிலையே யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

19 வயதுக்கு  கீழ்ப்பட்ட அணிகளுக்கான இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த  நிப்புன் தனஞ்சய தலைமை தாங்குகின்றார்.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கையுடன் சேர்த்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகியவற்றின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் போட்டியிடுகின்றன.

இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

இந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில்  பங்களாதேஷ் அணியை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

  • நிப்புன் தனஞ்சய (அணித்தலைவர்) – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வெண்ணப்புவ
  • பசிந்து சூரியபண்டார – றோயல் கல்லூரி, கொழும்பு
  • நவோத் பரணவிதான – மஹிந்த கல்லூரி, காலி
  • கமில் மிஷார – றோயல் கல்லூரி, கொழும்பு
  • நிஷான் மதுஷ்க – மொரட்டுவ வித்தியாலயம்
  • நுவனிது பெர்னாந்து – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
  • துனித் வெல்லாலகே – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
  • சஷிக்க துல்ஷான் – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
  • கல்ஹார சேனாரத்ன – புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி
  • றொஹான் சஞ்சய – திஸ்ஸ மகா வித்தியாலயம், களுத்துறை
  • சந்துன் மெண்டிஸ் – றிச்மண்ட் கல்லூரி, காலி
  • கலன பெரேரா – புனித தோமியர் கல்லூரி, கொழும்பு
  • நிப்புன் மாலிங்க – மஹிந்த கல்லூரி, காலி
  • நவீன் பெர்னாந்து – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
  • செல்வராசா மதுஷன் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

மேலதிக வீரர்கள்

  • லக்ஷித மதரசிங்க – நாலந்த கல்லூரி, கொழும்பு
  • முதித்த லக்ஷன் – டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு
  • விஜயகாந்த் வியாஸ்காந்த் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
  • சிலான் கலிந்து – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
  • சாமிக்க குணசேகர – ஆனந்த கல்லூரி, கொழும்பு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<