U19 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

188

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை இளையோர் அணியின் தலைவராக தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிபுன் தனன்ஜய உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் தலைவராக தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார். 

முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை சம்பியன்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்திருக்கும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் ………….

அதேநேரம், தவறான நடத்தை காரணமாக பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் இருந்து நீக்கப்பட்ட கமில் மிஷார, அஹான் விக்ரமசிங்க மற்றும் அஷைன் டேனியல் ஆகியோர், மேற்கிந்திய தீவுகளில் பிரகாசித்ததன் காரணமாக குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். 

இவர்களுடன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இருந்து நீக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் மதீச பத்திரணவுக்கு குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் இணைக்கப்பட்டிருந்த யசிரு ரொட்ரிகோ மற்றும் நவீன் பெர்னாண்டோ ஆகியோர் உலகக் கிண்ண குழாத்திலிருந்து வாய்ப்பை இழந்துள்ளனர்.

துடுப்பாட்டத்தை பொருத்தவரையில் தவீஷ அபிஷேக் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விக்கெட் காப்பாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் மொஹமட் சமாஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் ஏற்கனவே ரவிந்து ரஸந்த மற்றும் நவோத் பரணவிதான ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் அணியில் உள்ளதுடன், லக்ஷான் கமகே மற்றும் உபாதைக்குள்ளாகிய சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

டில்ஷான் மதுசங்க மற்றும் மதீச பத்திரண  ஆகியோருக்கு அடுத்தப்படியாக வேகப் பந்துவீச்சை பொருத்தவரை, அம்ஷி டி சில்வா மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் சமிந்து விஜேசிங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்க ஆடுகளங்களில் இவர்களது பங்களிப்பு அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுழல் பந்துவீச்சை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகளில் அபாரமாக பந்துவீசிய மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் கவிந்து நதீஷன் உட்பட சொனால் தினூஷ, டிலும் சுதீர மற்றும் அஷான் டேனியல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை இளையோர் அணி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரின் A குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், குழுநிலை போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை இளையோர் குழாம்

நிபுன் தனன்ஜய (அணித் தலைவர்), கமில் மிஷார, நவோத் பரணவிதான, அஹான் விக்ரமசிங்க, ரவிந்து டி சில்வா, சொனால் தினூஷ, மொஹமட் சமாஸ், தவீஷ அபிஷேக், சமிந்து விஜேசிங்க, அஷைன் டேனியல், டிலும் சுதீர, டில்ஷான் மதுசங்க, அம்ஷி டி சில்வா, கவிந்து நதீஷன், மதீஷ பத்திரண 

Cicketஇளையோர் உலகக் கிண்ணத்தின் குழுநிலை விபரம்

  • குழு A – இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, ஜப்பான்
  • குழு B – அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நைஜீரியா
  • குழு C – பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, ஸ்கொட்லாந்து
  • குழு D – ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<