ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

174

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை குழாம் இன்றைய தினம் (14) அறிவிக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவர் பதவியிலிருந்து விலக தயாராக இருக்கும் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க…..

இந்த குழாத்தில் பாகிஸ்தான்  அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஒரு சில மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தொடரில் விளையாடிய குசல் பெரேரா மற்றும் மேலதிக வேகப் பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டிருந்த அசித பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதுடன், சுரங்க லக்மால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளதுடன், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகிய அனுபவ வீரர்கள் அணியில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர்.

சுரங்க லக்மால் அணியின் வேகப் பந்துவீச்சு துறையை வழிநடத்தவுள்ளதுடன், பாகிஸ்தானில் சிறப்பாக பந்துவீசிய லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இடத்தை தக்கவைத்துள்ளனர். சுழல் பந்துவீச்சை பொருத்தவரை, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரை பொருத்தவரையில், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அல்லாத தொடராக நடைபெறவுள்ளது. ஜிம்பாப்வே அணியானது டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் விளையாடும் 9 அணிகளில் இடம்பெற்றிருக்கவில்லை. எவ்வாறாயினும், இந்த தொடரானது ஐசிசியின் தடைக்கு பின்னர் ஜிம்பாப்வே விளையாடும் முதல் சர்வதேச தொடராகவும் அமையவுள்ளது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 13 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், ஜிம்பாப்வே அணி எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை.

இறுதியாக இலங்கை அணி ரங்கன ஹேரத் தலைமையில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், தொடரை 2-0 என வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித

போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட் – ஜனவரி 19-23 – ஹராரே
  • இரண்டாவது டெஸ்ட் – ஜனவரி 27-31 – ஹராரே

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<